செங்கம், டிச.19: செங்கம் அருகே குப்பநத்தம் அணை வெள்ளத்தில் சிக்கிய 15 ஆடுகளை தீயணைப்பு துறையினர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனால், அணைகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பியது. அதன்படி, செங்கம் அடுத்த குப்பநத்தம் அணை நிரம்பியதால் 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் செய்யாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அணைக்கு நீர் வரத்தையும், தண்ணீர் ெவளியேற்றப்படுவதையும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மோட்டூர் கிராமத்தை சேர்ந்த திருமலை என்பவர் தான் வளர்த்து வரும் 15 ஆடுகளை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலை நீண்ட நேரமாகியும் ஆடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெயராமன் ஆடுகளை தேடி சென்றார். அப்போது, ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு குப்பநத்தம் அணை பகுதிக்கு சென்று பார்த்தபோது ஷெட்டரில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் 15 ஆடுகள் சிக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் ஆடுகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, ஜெயராமன் செங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், நிலைய அலுவலர் அருள் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேரிடர் மீட்பு உபகரணங்கள் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி 15 ஆடுகளையும் பத்திரமாக மீட்டு உரிமையாளர் திருமலையிடம் ஒப்படைத்தனர்.
The post குப்பநத்தம் அணை வெள்ளத்தில் சிக்கிய 15 ஆடுகள்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் appeared first on Dinakaran.