அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான வினாடி – வினா போட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி-வினா போட்டி நாளை தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டிக்கான மாவட்ட அளவிலான முதல்நிலை போட்டி தேர்வு காஞ்சிபுரம், மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (21.12.2024 சனிக்கிழமை) நாளை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிவதற்கான அடையாள அட்டை கொண்டு வருபவர்கள் மட்டுமே தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், தேர்வாளர்கள் தேர்வு நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாக தேர்வு கூடத்திற்கு வருகைபுரிய வேண்டுமெனவும், கைப்பேசி, ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் ஆகிய உபகரணங்கள் தேர்வின்போது அனுமதிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வு கொள்குறி வகை (Objective Type Test) வினாத்தாள் முறையில் நடைபெறவுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதிபெறும் மூன்று குழுக்கள் (3*3 = 9 நபர்கள்) தேர்வு செய்யப்பட்டு, வரும் 28ம்தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 28ம்தேதி நடைபெறும் இறுதிபோட்டி தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, முதல்பரிசு ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.1.50 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சமும், சிறந்த மூன்று குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள, அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி, பட்டயகல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்துக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 80125 05200, 50125 05201, 80125 05448, 88389 98004, 94448 73719 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான வினாடி – வினா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: