செங்கல்பட்டு – மெய்யூர் இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுமா? எதிர்பார்பில் விவசாயிகள்

செங்கல்பட்டு: மெய்யூர்-செங்கல்பட்டு இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டித்தர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடக மாநில நந்திதுர்கம் பகுதியில் உருவாகும் பாலாறு அம்மாநிலத்தில் 93 கிமீயும், ஆந்திராவில் 33 கிமீயும், தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக அதிகப்படியாக 222 கிமீ என மொத்தம் 348 கிமீ தூரம் தடம் பதித்த பாலாறு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகேயுள்ள வாயலூர் பகுதியில் கடலில் கலக்கிறது.

செங்கல்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் ஆர்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 50 ஆண்டுகால கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை திருக்கழுகுன்றம் அருகே வள்ளிபுரம், கல்பாக்கம் அருகேயுள்ள வாயலூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தடுப்பணை உள்ளது. செங்கல்பட்டு பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு எங்கும் தடுப்பணை அமைக்கப்படவில்லை. எனவே, செங்கல்பட்டு-மெய்யூர் இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு-மெய்யூர் இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டினால் சுற்றியுள்ள திம்மாவரம், ஆத்தூர், தேவனூர், பாலூர், காவூர், கரும்பாக்கம், வில்லியம்பாக்கம், தேவனூர், சாத்தணஞ்சேரி, மெய்யூர், பினாயூர், மாமண்டூர் என 50 கிராம விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், பாலாற்றில் தடுப்பணை கட்டினால், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மூன்று போகமும் விவசாயம் நடைபெறும். அதேபோல், ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் வரை நெல் அறுவடை செய்யலாம், என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வெள்ளம் பாலாறு வழியாக சென்று வீணாக கடலில் கலக்கிறது.

இதன் காரணமாக கோடை காலத்தில் வறண்டு செங்கல்பட்டு பாலாறு வரண்டு காணப்படுகிறது. தற்போது, வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்ததுள்ளனர். பாலாற்றில் தடுப்பணை கட்டினால், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மூன்று போகமும் விவசாயம் நடைபெறும்.

* நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் வாயலூர் பகுதியில் பாலாறு கடலில் கலப்பதால் பல டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கன மழை பெய்யும்போது, கடலில் கலக்கும் தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்து தேவையான இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தடுப்பணை மூலம் தண்ணீர் சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும், விவசாய கிணறுகள், ஆழ்த்துறை கிணறுகளில் நிலத்தடி மட்டமும் உயரும். இதனால், விவசாயமும் முப்போகம் விளைவிக்க முடியும். அதேநேரத்தில், நிலத்தடிநிர் மட்டம் உயர்வால் செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர் பிரச்னை என்பதே இல்லாமல் இருக்கும். எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக தடுப்பணை கட்டுவதற்காக நடவடிக்கைகளில் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.

* கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வள்ளிபுரம், வாயலூர் என இரண்டு தடுப்பணைகள் உள்ளன. இவை மழைக்காலம் மட்டும் அல்லாமல், கோடை காலத்திலும் தண்ணீர் நிரம்பியே காணப்படும். இந்நிலையில், சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழை கெட்டி தீர்த்தது. அதன் பிறகு மாவட்டத்தில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக பாலாற்றில் பயங்கர வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், மழைநீர் வெள்ளிபுரம், வாயலூர் தடுப்பணைகள் நிரம்பி அதன் உபரி நீரான பல டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. எனவே, கடலில் கலக்கும் தண்ணீர சேமிக்க செங்கல்பட்டு-மெய்யூர் இடையே தண்ணீரை சேமிக்க தடுப்பணை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post செங்கல்பட்டு – மெய்யூர் இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுமா? எதிர்பார்பில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: