ஆரணி, டிச.11: ஆரணி அருகே பாட்டியை அடித்துக்கொலை செய்து 16 சவரன் நகைகளை திருடிச்சென்ற பேத்தி தனது கள்ளக்காதலனுடன் பாண்டிச்சேரி ஓட்டலில் சிக்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் ஈபி நகரை சேர்ந்தவர் வேதபுரி. இவரது மனைவி சிந்தாமணி(75). இவரது கணவர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் சிந்தாமணியின் மகள் வழி பேரன் பிரதாப் குடும்பத்தினர் அவரை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி வழக்கம்போல் பிரதாப்பின் மனைவி சன்மதி, அவரது தாயார் உமா ஆகிய இருவரும் சிந்தாமணிக்கு மதிய உணவு வழங்குவதற்காக வீட்டிற்கு சென்றனர். அப்போது, சிந்தாமணி தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அவரது கழுத்தில் அணிந்திருந்த நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது.
தொடர்ந்து, படுகாயம் அடைந்த சிந்தாமணிக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நவம்பர் 17ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பிரதாப்பின் மனைவி சன்மதி கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிந்தாமணியின் மற்றொரு மகனான ஓய்வு பெற்ற போலீசாரின் மகள் மதுமதி(41) மற்றும் அவரது கள்ளக்காதலன் சென்னை கொளத்தூரை சேர்ந்த கவின்(எ)வெங்கடேசன்(36) ஆகிய இருவரும் சேர்ந்து, மூதாட்டி சிந்தாமணி தலையில் தாக்கி 16 சவரன் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், விநாயகமூர்த்தி, எஸ்ஐக்கள் அருண்குமார், மகாராணி, ஷாபுதீன், எஸ்எஸ்ஐக்கள் கன்ராயன், குமரகுரு, திருமால் தலைமையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து அவர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் எஸ்ஐ ஷாபுதீன், எஸ்எஸ்ஐக்கள் கன்ராயன், குமரகுரு மற்றும் போலீசார் புதுச்சேரிக்கு விரைந்து சென்றனர்.
பின்னர், பாண்டிச்சேரி குரும்பேட் வழைதாவூர் பகுதியில் உள்ள ஓட்டலில் கள்ளக்காதலன் வெங்கடேசனுடன் பதுங்கிருந்த மதுமதியை கைது செய்து, ஆரணி தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், பாட்டி சிந்தாமணியை தாக்கி 16 சவரன் நகைகளை திருடிச்சென்றதும், அதனை விற்று கோவா, கேரளா, மும்பை, பாண்டிச்சேரியில் உள்ள ஓட்டல்களில் ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட மதுமதி, வெங்கடேசன் ஆகிய இருவரையும் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூரில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் சிறையில் இருவரையும் அடைத்தனர்.
The post 16 சவரன் நகைகள் திருடிய பேத்தி கள்ளக்காதலனுடன் கைது புதுச்சேரி ஓட்டலில் சிக்கினர் ஆரணி அருகே பாட்டியை அடித்துக்கொன்று appeared first on Dinakaran.