×

நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதிக்க மறுப்பு ஆளுநர் மாளிகையை இன்று காங்கிரஸ் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பாக அதானி உள்ளிட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மணிப்பூர் கலவரத்தை அடக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்க்காதது குறித்தும் விவாதிப்பதற்காக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உரிய விதிப்படி அனுமதி கோரப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

நாட்டையே உலுக்குகிற முக்கியமான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியினர் அனுமதி மறுத்ததை கண்டித்து நாடு முழுவதும் மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய பாஜ அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப அனுமதி மறுத்ததன் விளைவாக மக்கள் மன்றத்தில் இப் பிரச்னையை கொண்டு செல்கிற வகையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதிக்க மறுப்பு ஆளுநர் மாளிகையை இன்று காங்கிரஸ் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Congress Committee ,India Coalition Parties ,Congress ,Parliamentary Winter Session ,Manipur ,Governor's ,House ,Parliament ,Dinakaran ,
× RELATED செல்வப்பெருந்தகை ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து..!!