×

அமைச்சர் சாமிநாதன் தலைமையில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025″ முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்..!!

சென்னை: அமைச்சர் சாமிநாதன் தலைமையில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025″ முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று (16.12.2024), தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெறும் “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025”-ஆம் ஆண்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி, இ.ர.பா.ப, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன், டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சீ.சௌம்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025” குறித்து செய்தியாளர்களிடத்தில் தெரிவித்ததாவது:

முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில், வழிகாட்டுதலோடு கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில், சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதைப்போல, இந்த ஆண்டும் நடத்தப்படயிருக்கிறது. அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஏற்கனவே நடைபெற்று முடிந்திருக்கிறது. மீண்டும் இரண்டாவது ஒருங்கிணைப்புக் கூட்டம் இப்போது துவங்கவிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு நடத்தியதைவிட இன்னும் கூடுதலாக அதற்குக் கிடைத்த அனுபவத்தை வைத்து சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில், கலைப் பண்பாட்டுத் துறை இந்தப் பணியை துவங்கியிருக்கிறது. இன்றைக்கு அதற்கான சிறந்த கலைஞர்களை ஏழு மண்டலங்களாக தேர்வு செய்து அந்த ஏழு மண்டலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களை மாநில அளவில் பயிற்சியும் வழங்கி, புதிய முறைகளை புகுத்தி இந்தத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்காக திட்டமிடப்பட்டு இந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் துவங்கவிருக்கிறது. முதலமைச்சர் கடந்த ஆண்டு கலந்து கொண்டதைப் போல, 13-ஆம் தேதி “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025” நிகழ்ச்சியை துவக்கி வைப்பார்கள்.

அதற்குப் பிறகு 18 இடங்களில், 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நிகழ்ச்சி நடத்தப்படயிருக்கின்றது. சென்னையில் பல்வேறு இடங்களிலும், சென்னையை ஒட்டியிருக்கின்ற மாவட்டங்கள் மட்டுமல்லாமல், மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற பல்வேறு பகுதிகளிலும் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக, எலியாட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு அரசுப் பள்ளி வளாகம், நடேசன் நகர், தி.நகர் பகுதியிலும், அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா, கோயம்பேட்டில் உள்ள ஜெய்நகர் பூங்கா, கே.கே.நகரில் உள்ள சிவன் பூங்கா, வளசரவாக்கத்தில் உள்ள லேமேக் பள்ளி வளாகம்,

பழனியப்பா நகர், கொளத்தூர் மாநகராட்சி திடல், ராபின்சன் விளையாட்டுத் திடல், முரசொலிமாறன் மேம்பாலப் பூங்கா, பாரத சாரணர், சாரணியர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல், நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்ற இடங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அதுபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்துவதற்காக முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறக்கூடிய இந்நிகச்சியில் சுமார் 1500 கலைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அதற்கான பயிற்சியும், புதிய முறைகளை புகுத்துவதற்கான முயற்சியும் நடைபெற்று வருகிறது. எனவே, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மேலும் சிறப்பு செய்கின்ற வகையில், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், நம்முடைய தமிழர் திருநாளை முன்னிட்டு “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025” நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். என அமைச்சர் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

The post அமைச்சர் சாமிநாதன் தலைமையில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025″ முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Chennai Sangamam Namma Uru Festival 2025 ,Chennai ,Minister of Tamil ,Development and ,Information… ,
× RELATED சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு...