×

தூத்துக்குடியில் இன்று 4வது நாளாக 5 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீர்: மின் மோட்டார்களை வைத்து இறைத்தும் தண்ணீர் குறையாததால் மொட்டை மாடியில் சமைக்கும் அவலம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று 4வது நாளாக 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மின் மோட்டார்களை வைத்து இறைத்தும் தண்ணீர் குறையாததால் மொட்டை மாடியில் சமைத்து சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 12,13,14 ஆகிய 3 நாட்கள் பெய்த கனமழையாலும், காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாலும் கோரம்பள்ளம், சோரீஸ்புரம், மாதவன் நகர், கல்லூரி நகர், டையமண்ட் காலனி, திருவிக நகர், இந்திரா நகர், சத்யாநகர், அமலாநகர், ஜேஜே நகர், அபிராமி நகர், ஜேஎஸ்நகர், சுந்தர்நகர், முள்ளக்காடு, முத்தையாபுரம், காதர்மீரான் நகர், பெருமாள்புரம், அனல்மின்நிலையம் குடியிருப்பு-1,2, தூத்துக்குடி மீளவிட்டான், பண்டாரம்பட்டி, விஎம்எஸ் நகர், முத்தம்மாள்காலனி, தனசேகரன்நகர், அய்யப்பன் நகர், ஓம் சாந்தி நகர், தபால்தந்தி காலனி, திரவிய ரத்தின நகர், பால்பாண்டி நகர், அன்னைதெரசா நகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் சிலர் தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு மேடான பகுதிகளில் குடியிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு ெசன்றுள்ளனர். சிலர் வீடுகளை காலி செய்து இடம் பெயர்ந்து விட்டனர். கழுத்தளவு வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் குடியிருக்கும் மக்கள், மொட்டை மாடிக்கு சென்று அங்கு கேஸ் அடுப்புகளில் சமையல் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகமும், பேரிடர் மீட்பு படையினரும் துரிதமாக செயல்பட்டு மின் மோட்டார்களை வைத்து வெள்ள நீரை இறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டாலும், ஊற்றெடுத்தது போல் மீண்டும், மீண்டும் மழை நீர் வந்த வண்ணம் இருப்பது, மாநகராட்சி பணியாளர்களை சோர்வடைய வைத்துள்ளது. இருப்பினும் ராட்சத மின் மோட்டார்களை வைத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் முழுமையாக வடிந்துள்ளது. கலெக்டர் அலுவலகம், எஸ்பி ஆபீசில் இன்னும் கால்வாசி மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருப்பினும் அலுவலர்கள் செல்வதற்கு மழை நீர் இல்லாத பாதை அமைக்கப்பட்டுள்ளது. மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் இடைவிடாது அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு-பகலாக ஈடுபட்டுள்ளனர்.

 

The post தூத்துக்குடியில் இன்று 4வது நாளாக 5 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீர்: மின் மோட்டார்களை வைத்து இறைத்தும் தண்ணீர் குறையாததால் மொட்டை மாடியில் சமைக்கும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Toutukudi ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை காரணமாக சென்னையில்...