நீதிபதி லோயா மரணம் குறித்து திரிணாமுல் எம்பி மொய்த்ரா பேச்சால் சர்ச்சை: நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை

புதுடெல்லி: நீதிபதி லோயா மரணம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மஹூவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ரா கலந்து கொண்டு பேசினார். அப்போது குஜராத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிரிஜ்கோபால் ஹரிகிஷன் லோயாவின் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பாஜ உறுப்பினர் நிஷிகாந்த் துபே, “மறைந்த நீதிபதி லோயா மரணம் பற்றி மொய்த்ரா மறைமுகமாக பேசியுள்ளார். மேலும் கணபதி விழாவின்போது அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி சென்றதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்திர சூட்டையும் மொய்த்ரா விமர்சித்தார். இது கண்டனத்துக்குரியது” என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “லோயா மரணம் குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம் அது இயற்கை மரணம். அவரது மரணத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என தெரிவித்தது. லோயா மரணம் தொடர்பான வழக்கு முடிந்து விட்ட நிலையில், அவரது மரணம் பற்றிய மொய்த்ராவின் கருத்துகள் மிகவும் தீவிரமானவை. இந்த விஷயத்தில் நீங்கள்(மொய்த்ரா) தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறீர்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

The post நீதிபதி லோயா மரணம் குறித்து திரிணாமுல் எம்பி மொய்த்ரா பேச்சால் சர்ச்சை: நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: