விசா கிராமத்தின் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது துணை கேள்வி எழுப்பி காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக) பேசுகையில், ‘நீர்வளத் துறை அமைச்சர், அவை முன்னவர் துரைமுருகனுடைய மாவட்டத்திலிருந்து வருகின்ற பாலாறு காஞ்சிபுரம் எல்லையில் நுழைந்து பிறகு, நீண்டதூரம் பயணித்து அது கடலில் கலக்கிறது. அந்த பாலாற்றின் நடுவே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையிருக்கிறது. பேரறிஞர் அண்ணா மண்ணின் மீது அவர் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவர். எனவே, அதை பரிசீலித்து விசா கிராமத்தின் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்ட முன்வருவாரா என்பதை அறிய விரும்புகிறேன்’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘எல்லா உறுப்பினர்களுடைய ஒட்டுமொத்த கோரிக்கையும், ஆங்காங்கு நீர்வளத்தைப் பெருக்குவதற்கு தடுப்பணை கட்டு வேண்டும் என்பதுதான். அதை நான் முழுக்க ஏற்றுக்கொள்கிறேன். நானே பரிட்சார்த்தமாக பார்த்திருக்கிறேன். எனவே, இந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடத்தில் இதுபற்றி எடுத்துக்கூறி பெரும் நிதியைப் பெற்று 1,000 தடுப்பணைகள் கட்டுவதற்கு வேண்டிய அனுமதியைப் பெற வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆகவே, அண்ணா மண்ணாக இருந்தாலும் சரி, தம்பி மண்ணாக இருந்தாலும் சரி. எல்லா மண்ணுக்கும் தடுப்பணை கட்டப்படும்’ என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post விசா கிராமத்தின் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: