வாலாஜாபாத், டிச. 12: வாலாஜாபாத் ஒன்றியம் நாயக்கன்பேட்டை ஊராட்சியில், 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், இ சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. ஊராட்சியின் மையப் பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானம். தற்போது, இந்த மைதானத்தில்தான் மாவட்ட, ஒன்றிய பள்ளிகள் அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், சுற்றுவட்டார கிராமப்புற இளைஞர்களும் விடுமுறை நாட்களில் இங்குதான் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த விளையாட்டு மைதானம் முறையாக பராமரிக்கப்படாததால் முள் செடிகள் முளைத்து புதர் மண்டியது. இதனால் மாணவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் இந்த மைதானத்திற்கு வருவதை தவிர்த்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதனையடுத்து, ஊராட்சியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஊராட்சி நிர்வாகம் டிராக்டர் மூலம் செடி, கொடிகளை அகற்றும் பணியை தீவிரமாக செய்து வருகிறது. இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
The post நாயக்கன்பேட்டை ஊராட்சியில் விளையாட்டு மைதானம் சீரமைப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.