பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த மதுரவாயல் அருகே 9 மாத ஆண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியானது. பூந்தமல்லி அருகே மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பிரதான சாலையில் வசித்து வருபவர் அருண்பிரசாத். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதில் பிறந்து 9 மாதமே ஆன 2வது மகன் அகிலனுக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகே உள்ள கிளினிக்கில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து காய்ச்சல் குறையாததால், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும், அங்கு உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த மதுரவாயல் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 9 மாத குழந்தை மர்ம காய்ச்சலில் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி appeared first on Dinakaran.

Related Stories: