திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், திருத்தணி, மாதவரம் ஆகிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் வசித்து வருகின்றனர். 61 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் விவசாய நிலத்திற்கான வரி, ரேஷன் அட்டை பெறுதல், முதியோர் ஊக்கத்தொகை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அரசு மற்றும் தனியார் இ சேவை மையம் மற்றும் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவாக தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கி வருகின்றனர்.
இதில் பெரும்பாலான மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அனுப்பப்படுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட பட்டா மாறுதல், பட்டாவில் பெயர் சேர்த்தல், ஆன்லைன் பட்டாவில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வட்டாட்சியர் மூலமாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு ஆய்வு செய்த பின்னர், மீண்டும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வருட காலமாக சில மனுக்கள் மீது சான்றிதழ் சரிபார்ப்பு என இரண்டு மூன்று முறை வரவழைத்து அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிந்தும் கோட்டாட்சியர் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்தி வருவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையி, நிலம் சம்பந்தப்பட்ட மனுவுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை இடைத்தரகர் மூலம் கொண்டு வந்தால் உடனடி தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பகிரங்கமாக கூறுகின்றனர். இதனால் நேரடியாக பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தும் சுமார் ஒரு வருடமாகியும் அதற்கு கையெழுத்து போடாமல் கோட்டாட்சியர் காலம் தாழ்த்தி வருகிறார். கோட்டாட்சியரின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக நான்கு பேர் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு புகாராக எழுதி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிடவும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புரோக்கர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றனர்.
The post பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கையெழுத்திடாமல் மாத கணக்கில் தேங்கி நிற்கும் மனுக்களால் மக்கள் அவதி: கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.