பெரியபாளையம் குருவாயல் கிராமத்தில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி சீரமைப்பு

ஊத்துக்கோட்டை: குருவாயல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது. பெரியபாளையம் அருகே உள்ள குருவாயல் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியை 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த குடிநீர் தொட்டியின் தூண்களும், அடிப்பகுதியில் சிமெண்ட் சிலாப்புகளும் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே இதற்குப் பதில் வேறு இடத்தில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த குடிநீர் தொட்டி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இது பள்ளி வளாகத்தில் உள்ளதால், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.

எனவே புதிய குடிநீர் தொட்டி கட்டிக்கொடுக்க வேண்டும் என கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால் குடிநீர் தொட்டியை சீரமைக்க 15வது நிதிக்குழு மூலம் ₹3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர்தொட்டி சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post பெரியபாளையம் குருவாயல் கிராமத்தில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: