சேலத்தில் பெய்த கனமழையால் சாய்ந்து வீணாகிப்போன நெற்பயிர்கள்

* கவலையில் விவசாயிகள்

* நிவாரணத்திற்கு எதிர்பார்ப்பு

சேலம் : சேலத்தில் பெய்த மழை காரணமாக கன்னங்குறிச்சி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிர்கள் சாய்ந்து வீணாகிப் போனதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனனர்.
சேலம் மாவட்டத்தில் நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. நெல்லுக்கு அடுத்தப்படியாக மரவள்ளிக்கிழங்கு, கரும்பு, மஞ்சள், கேழ்வரகு, கம்பு, சோளம் உள்பட பல பயிர்களும், இதைதவிர தோட்டப்பயிர்கள் அதிகளவில் சாகுபடி நடக்கிறது. பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் கனமழை பெய்தது.

குறிப்பாக ஏற்காடு, ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல், மேட்டூர், ஓமலூர், டேனீஷ்பேட்டை பகுதிகளில் அதிக மழை பொழிவை தந்தது. மூன்று நாட்கள் பெய்த மழையால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களில் மழைநீர் மூழ்கி நாசமானது. அந்த வகையில், சேலம் அடுத்த கன்னங்குறிச்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அப்பகுதியில் பெய்த கனமழையால் நெற்பயிர் நிலங்களில் மழைநீர் தேங்கி சாய்ந்தது. இன்னும் பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நாசமாகி போனதை கண்டு அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து கன்னங்குறிச்சி பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஏற்காடு சேர்வராயன் மலையில் இருந்து கன்னங்குறிச்சி புதுஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரி தான், இப்பகுதி விவசாயிகளுக்கான பெரும் நீராதாரமாக உள்ளது. இப்படி நீராதாரமாக இந்த ஏரி இருந்தாலும் நிரம்பி வழியும் காலங்களில் பயிர்கள் சேதம் என்பதும் தொடர்ந்து வருகிறது. ஆயிரம் ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் ஏரியை சுற்றியே அமைந்துள்ளது. மேலும் இதர விளைநிலங்கள் அமைந்திருப்பதும் தாழ்வான பகுதிகளாக உள்ளது. இந்தநிலையில் பெஞ்சல் புயல் மழையால் ஏரிக்கு நீர்வரத்து எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக காணப்பட்டது.

இதேபோல் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதன்காரணமாக கன்னங்குறிச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதமானது. குறிப்பாக இந்த பகுதியில் காற்றும் பலமாக வீசியது. காற்றும், புயலும் கலந்து வந்த நிலையில் நெற்பயிர்கள் அனைத்தும் கனமழையில் சாய்ந்து வீணாகி போனது. அடுத்த 10நாட்களில் இதனை அறுவடை செய்யலாம் என்று எண்ணி காத்திருந்தோம்.

ஆனால் பெஞ்சல் புயல்மழையானது, எங்களது உழைப்பில் விளைந்த நெற்பயிர்களை முற்றிலும் நாசமாக்கி விட்டது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இங்குள்ள பயிர்சேதங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து உரியநிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

The post சேலத்தில் பெய்த கனமழையால் சாய்ந்து வீணாகிப்போன நெற்பயிர்கள் appeared first on Dinakaran.

Related Stories: