விடுமுறை தினத்தையொட்டி புத்தகக் காட்சியில் அலைமோதிய வாசகர்கள், பொதுமக்கள் கூட்டம்

சென்னை: புத்தகக் காட்சியில், விடுமுறை தினத்தையொட்டி நேற்று வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48வது புத்தகக் காட்சி நடந்து வருகிறது. நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புத்தக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தார்கள். புத்தகக் காட்சியில் 900க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ள நிலையில் அனைத்து அரங்குகளிலும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தினகரன்- சூரியன் பதிப்பகத்திற்கு இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகள் 329, 330 என்ற எண்களில் அமைந்துள்ளன. விடுமுறை தினத்தில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலைநாட்களில் பிற்பகல் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அதிக அளவில் புத்தகத்தை வாங்கி சென்றனர். அதுமட்டுமின்றி, புத்தககாட்சியில் பகுதிகளில் உணவு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

விடுமுறை தினத்தன்று பிள்ளைகளுடன் வந்து புத்தகம் வாங்கி இங்கு இருக்கும் உணவுகள் சாப்பிடுவது நல்ல அனுபவம் என குடும்பத்துடன் புத்தக கண்காட்சிக்கு வந்தவர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: புத்தகக் காட்சியில் இந்த முறை குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். புத்தக்க காட்சியை பார்ப்பதற்கு நேரமில்லை, இன்னும் இரண்டு மூன்று நாட்கள் வந்து பார்த்தால் திருப்தி அடையலாம்.

அந்த அளவிற்கு புத்தகங்கள் இருக்கிறது. ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளது. உலகத்தில் இருக்கும் பொழுதுபோக்குகளை விட புத்தகம் படிப்பது சிறந்த பொழுதுபோக்கு. குழந்தைகள் அதிக புத்தகத்தை வாங்கி உள்ளனர். மேலும் இங்கு அமைந்து இருக்கும் உணவகங்களில் உணவு சாப்பிடுவது நல்ல அனுபவமாக உள்ளது. ஒரு நாள் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* இன்றைய நிகழ்வு
வாசிப்பில் இருக்கிறது வாழ்க்கை என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தாவும், வரலாற்றை வாசித்தல் என்ற தலைப்பில் தேவேந்திர பூபதியும், மதிப்புரைகளும் வாசிப்பும் என்ற தலைப்பில் வேங்கடாசலபதியும் பேச உள்ளனர்.

The post விடுமுறை தினத்தையொட்டி புத்தகக் காட்சியில் அலைமோதிய வாசகர்கள், பொதுமக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: