ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாளை (செவ்வாய்க்கிழமை) அவை ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து புதன், வியாழன், வெள்ளி என 3 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடந்தபோது, ஆளுநர் ஆர்.என்.ரவி. உரையாற்றும்போது, தமிழக அரசு வழங்கிய உரையில் சிலவற்றை நீக்கியும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் சொந்தமாக படித்த வரிகளை நீக்க பேரவையில் உடனடியாக தீர்மானம் கொண்டு வந்து திமுக அரசு நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவையைவிட்டு வெளியேறினார். 2024ம் ஆண்டும், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, உரையில் உண்மைத்தன்மை மற்றும் தார்மீக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, தமிழக அரசின் உரையை புறக்கணித்தார் அதன்பின் சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையை படித்தார். இதுபோன்ற நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச உள்ளன.
இதுதவிர பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 பணம் வழங்கப்படாதது குறித்தும் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவார்கள் என தெரிகிறது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இதனால் இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. சட்டசபை இன்று கூடுவதை அடுத்து தலைமை செயலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் appeared first on Dinakaran.