அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை: சோதனையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு

* ஆபாச வீடியோக்கள் குறித்து மனைவிகளிடமும் சரமாரி கேள்வி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24ம் தேதி இரவு காதலனுடன் இருந்த மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்த 24 மணி நேரத்தில் சென்னை பெருநகர போலீசார், அறிவியல் பூர்வமான விசாரணையின்படி கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (37) என்ற பிரியாணி கடைக்காரரை கைது செய்தனர்.

மாணவி விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஞானசேகரன் பயன்படுத்திய லேப்டாப் மற்றும் சிம்காடுகள் உள்ளிட்ட ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து எலும்பு முறிவு காரணமாக தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவத்தன்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றது ஏன், மாணவி காதலனுடன் பேசிக்கொண்டிருந்ததை வீடியோ எடுத்து காதலனை எதற்காக அடித்து உதைத்தாய், அதன் பிறகு மாணவியை மிரட்டி செல்போனில் வீடியோ எடுத்து என்ன செய்தாய் என்பது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டனர்.

அதற்கு ஞானசேகரன் அளித்த பதிலை சிறப்பு விசாரணை குழுவினர் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். அதன் பிறகு ஞானசேகரனின் மனைவிகளான விக்டோரியா, சாயா உள்ளிட்டோரிடம் தனித்தனியாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். இதுதவிர, ஞானசேரகன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில் சில போல்டர்கள் உள்ளது. அந்த போல்டரை ஞானசேகரன் பாஸ்வேர்டு மூலம் லாக் செய்துள்ளார்.

இதனால் அந்த போல்டரை திறக்க தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த லேப்டாப்பில் ஞானசேகரன் பல பெண்களுடன் ஒன்றாக இருந்த வீடியோக்கள் வைத்திருப்பதாக ஞானசேகரன் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் கூறியிருந்ததால், அது தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருவதால், ஞானசேகரன், அவரது மனைவிகள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விவரங்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் வெளியே விடாமல் ரகசியம் காத்து வருகின்றனர். இதற்கிடையே ஞானசேரகன் பயன்படுத்தி வந்த ‘தார் ஜீப்’ மற்றும் மினி வேன் ஆகியவற்றுக்கு மாத தவணை கட்டாததால், பைனான்ஸ் நிறுவனம் ஜீப்,வேனை பறிமுதல் செய்தது. ஞானசேகரனின்பைக் மட்டும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.

* ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது
மாணவியை மிரட்டி வீடியோ எடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (37) கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் வழக்கை நீதிமன்ற உத்தரவுப்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலம், கைது செய்யபட்ட ஞானசேகரன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பெருநகர காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர். அந்த பரிந்துரையின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி ஞானசேகரனை நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஞானசேகரன் 4வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை: சோதனையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: