சபரிமலைக்கு பக்தர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு பம்பையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை: தேவசம்போர்டு தலைவர் திறந்து வைத்தார்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பக்தர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்குவதற்காக பம்பையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் குழந்தைகளுடன் இந்த வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இவர்கள் பம்பை வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இங்கு இவர்கள் ஓய்வு எடுப்பதற்கு போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் பம்பையில் பெண்கள் ஓய்வெடுப்பதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் குளிரூட்டப்பட்ட அறை கட்டப்பட்டுள்ளது. இதில் 50 பேர் தங்கலாம். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், இந்த அறையை திறந்து வைத்தார். குடிநீர், கழிப்பறை உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அன்னம் ஊட்டும் சடங்கு சபரிமலையில் நடைபெற்று வருகிறது.

இதற்காக தினமும் ஏராளமான குழந்தைகளுடன் தாய்மார்களும் வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஓய்வு அறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார். கட்டுக்கடங்காத கூட்டம்: சபரிமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 3.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று திங்கட்கிழமை என்ற போதிலும் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்துள்ளனர்.

The post சபரிமலைக்கு பக்தர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு பம்பையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை: தேவசம்போர்டு தலைவர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: