சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில், ஞானசேகரனின் கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் இருக்கிறார் என சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டறிந்து உள்ளனர். அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவி தவிர்த்து 4 பேர் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களை பற்றிய தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அளித்துள்ள பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. குழுவின் பரிந்துரை அடிப்படையில் போலீசார் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.