சீனாவில் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல்..? கேரளா, தெலங்கானா அரசுகள் அலர்ட்

புதுடெல்லி: சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா, தெலங்கான அரசுகள் அறிவுரைகளை வழங்கி உள்ளன. சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் விடுபட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு தொற்று பரவலா? என்று உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலேயே கேரள மாநில மக்கள்தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். எனவே சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அந்த மாநில அரசு தீவிரமாக கண்காணிக்கத்தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் தனது சமூக வலைதள பதிவில், ‘சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றுநோயாக மாறக்கூடிய அல்லது மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவக்கூடியதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

உலகின் அனைத்து பகுதிகளிலும் மலையாளிகள் இருப்பதால், சீனா உள்பட வெளிநாட்டவர்கள் அடிக்கடி மாநிலத்திற்கு வருவதால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். இருப்பினும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தெலங்கானாவின் பொது சுகாதார இயக்குனர் பி.ஆர்.அவிந்தர் நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெலங்கானா மாநிலத்தில் இதுவரை எச்.எம்.பி.சி. பாதிப்பு பற்றி எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சர்வதேச சுகாதார அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சீனாவில் பரவி வரும் சுவாச நோய்கள் தொடர்பாக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. எச்.எம்.பி.வி வைரசால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் கவலைப்பட வேண்டாம். சீனாவில் வழக்கத்திற்கு மாறான நிலை இல்லை. சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் அளிக்கும் தகவல்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது’ என்று தெரிவிக்கபட்டுள்ளது.

யாருக்கு ஆபத்து அதிகம்?
எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்றானது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாச நிலைமைகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்த தொற்று காரணமாக சீனாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். என்றாலும் கூட இது ஒரு புதிய வைரஸ் அல்லது உடனடி தொற்று அச்சுறுத்தல் அல்ல. பருவகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு போன்றதுதான். இது சாதாரண கிளைமேட் காய்ச்சல் போன்றதுதான் என்று சீனா மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post சீனாவில் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல்..? கேரளா, தெலங்கானா அரசுகள் அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: