சூனாம்பேடு ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் புதர் மண்டி வீணாக வெளியேறும் ஏரி நீர்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வேண்டுகோள்

செய்யூர், டிச.8: சூனாம்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள சித்தேரி ஏரி கடந்த 10 ஆண்டு காலமாக தூர்வாரப்படாததால் ஏரி நீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் இருந்து புதுப்பட்டு செல்லும் வழி இடையே சித்தேரி ஏரி அமைந்துள்ளது. சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட இந்த ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி நீர் மூலம் சூனாம்பேடு சுற்றியுள்ள சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஒரு காலத்தில் இங்குள்ள விவசாயிகள் 3 போகம் வரை பயிர் செய்து வந்தனர். ஆனால், தற்போது இரண்டு போகம் கூட விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த ஏரி கடந்த பல ஆண்டு காலமாக தூர்வாரப்படவில்லை. முன்பு 20 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் கல்லாத்தி, கோரைகள் மற்றும் செடிகள் முழுவதும் படர்ந்து தூர்ந்து போனது. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மழைக்காலங்களில் இந்த ஏரியில் நிரம்பும் நீர் உபரிநீர் வழியாக வீணாக வெளியேறி வருகிறது.

இந்த ஏரி நீர் மூலம் பயன்பெற்று வந்த விவசாயிகள் இந்த ஏரியை தூர்வாரி மறுபுனரமைப்பு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் அவர்களாகவே முன்வந்து மழைக்காலங்களில் ஏரியில் இருந்து நீர் வெளியேறாத வகையில் மண் மூட்டைகளை அடுக்கி நீரை பாதுகாத்து வந்தனர். ஆனால், தற்போது பெஞ்சல் புயல் மழை காரணமாக உபரிநீர் செல்லும் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மண் மூட்டைகளும் அடித்து செல்லப்பட்டு ஏரி நீர் வெளியேறியது. இந்நிலையில், மழை நின்றும் இன்று வரையில் ஏரி நீர் வீணாக வெளியேறி வருகிறது. நீர் வெளியேறும் பகுதியில் அப்பகுதிவாசிகள் மீன்கள் பிடித்து, குளிக்கும் நிலையில் மறுபுறம் இங்குள்ள விவசாயிகள் நீர் வீணாக வெளியேறுவதால் பெரும் வேதனை அடைந்துள்ளனர். எனவே, இந்த ஏரி நீர் மூலம் பயனடைந்து வந்த விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஏரியை தூர்வாரி மறுபுனரமைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post சூனாம்பேடு ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் புதர் மண்டி வீணாக வெளியேறும் ஏரி நீர்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: