கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ், சசிகலாவை விசாரிப்பதில் தவறில்லை: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிப்பதில் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017, ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி அளித்த உத்தரவிட்டார். அந்த தீர்ப்பு விபரம் வருமாறு:

குற்ற விசாரணை முறை சட்டப்படி, தங்கள் தரப்பு சாட்சி ஆதாரங்களை சமர்ப்பிக்க குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி வகித்ததால் அவரை விசாரிக்க கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அவர் முதலமைச்சராக இல்லை. வழக்கு தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வர அவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படும் காரணங்களில் நியாயம் உள்ளது. கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்து 5 நாட்களில், குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார். மற்றொரு நபரான சயான், கேரளாவில் விபத்தில் சிக்கி மனைவி, மகளை இழந்துள்ளார். 2 மாதங்களுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டில் உதவியாளராக பணியாற்றிய தினேஷ் குமார், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அசம்பாவித சம்பவங்கள், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கேட்பது நியாயம் தான்.

ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் வரும்போது அமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி அங்கு சென்றிருப்பார். பங்களா குறித்து அவருக்கு தெரிந்திருக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும்
காரணங்கள் ஏற்று கொள்ளத்தக்கவை என்பதால் நீதியின் நலன் கருதி நியாயமான விசாரணை கருதி குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்க மறுப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விசாரிப்பது தேவையற்றது என கூற முடியாது.

ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் செல்லும் போது ஐஏஎஸ் அதிகாரி சங்கர், ஐபிஎஸ் அதிகாரி முரளி ரம்பா ஆகியோர் உடன் இருந்திருப்பார்கள். சம்பவம் நடந்த போது கொடநாடு எஸ்டேட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். அதனால் இவர்களை விசாரிக்க வேண்டும். கட்சியின் அமைப்பாளர் சஜீவன் மற்றும் சுனில் ஆகியோரும் ஜெயலலிதா வரும்போது அங்கு இருந்திருப்பார்கள். அதனால் அவர்களையும் விசாரிக்க வேண்டும்.

ஏற்கனவே இந்த வழக்கில் மேல்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எட்டு பேரையும் எதிர் தரப்பு சாட்சிகளாக விசாரிப்பதால் விசாரணையில் தாமதம் ஏற்படும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. வழக்கு விசாரணையில் இருதரப்புக்கும் வாய்ப்பு வழங்கி விசாரணையை நீலகிரி நீதிமன்றம் முடிக்க வேண்டும். மேல் விசாரணையின் அடிப்படையில் கூடுதல் சாட்சிகளை விசாரிக்க அரசு தரப்பு கேட்கும் போது, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்தபின் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், ஐ ஏ எஸ் அதிகாரி சங்கர், ஐபிஎஸ் அதிகாரி முரளிரம்பா, அதிமுகவினர் சஜீவன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ், சசிகலாவை விசாரிப்பதில் தவறில்லை: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் appeared first on Dinakaran.

Related Stories: