வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. இந்நிலையில் வங்கக்கடலில் கடந்த வார தொடக்கத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது இது படிப்படியாக வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் கிழக்கு-வடகிழக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வலுவிழக்கும் என கூறப்பட்டது. அதேபோல ஞாயிற்றுகிழமை அன்று தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது .
இது ஆந்திர கடலோர பகுதிகளில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழ்நாடு கரையோரம் திங்கட்கிழமை நிலை கொண்டது. இது தொடர்ந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வலுவிழக்கக்கூடும். மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் டிச.30ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்றய தினம் ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. சென்னையில் இன்று காலை ஒரு சில பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
The post வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் 5 நாள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.