சென்னை: அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் தங்கு தடையின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி. செழியன் உறுதி அளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், செல்போனில் வீடியோ பதிவு செய்த நடைபாதை பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து கைதான ஞானசேகரனை 15 நாள் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஞானசேகரனை சிறையில் அடைக்க போலீஸ் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரப்படும். பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தின்போது குற்றவாளிகளுக்கு மாநில அரசே துணை நின்றது.. ஆனால் இப்போது அண்ணா பல்கலை., மாணவியிடம் புகார் மனு பெறப்பட்ட 3 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி நடந்த விஷயங்களை முன்பே பல்கலைக் கழக பாதுகாப்பு குழுவிடம் தெரிவித்திருக்க வேண்டும். முன்பே தெரிவித்திருந்தால் இன்னும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும். பாதுகாப்பு பிரச்சினை, அச்ச உணர்வு காரணமாக பின்னர் புகார் அளித்துள்ளார் மாணவி. 2 தினங்கள் கழித்து புகார் அளித்திருந்தாலும் உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு, பல்கலைக் கழகம், காவல்துறை விரைந்து செயல்பட்டுள்ளது. அரசை பாராட்ட மனமில்லாமல் சிலர் குறை சொல்லி வருகின்றனர்.அமைதியாக இருந்த தமிழகத்தில் அண்ணாமலை தனது குணத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார். மாணவ, மாணவிகளின் நலன் காக்க பெருந்துணை புரிவோம்.,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தரப்படும் : அமைச்சர் கோவி. செழியன் உறுதி appeared first on Dinakaran.