×

தும்மட்டி விதைகளில் தங்கமணிகள்


17-ஆம் நூற்றாண்டில், கடப்பா மாவட்டம் ராயலசீமா காந்தி கோட்டாவில் வாழ்ந்தவர், வேமனார். இவர் பாடிய பாடல்கள் அத்தனையும், மக்களின் நலனை கருதிய சீர்திருத்த பாடல்கள். ஜாதி, மத பேத ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டியே இவரது பாடல்கள் இருக்கும். இவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் பலவும் மிக சுவாரஸ்யமானது. அதனை இந்த தொகுப்பில் காண்போம்.

விரல் நுனியில் எழுத்து

வேமனாரின் குடும்பம், செல்வச் செழிப்பான வளம் நிறைந்தது. இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்து, அண்ணன் அண்ணியிடம் வளர்ந்தவர். அண்ணி நரசாம்மா கொழுந்தனை தன் மகனாக வளர்த்தாள். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, ஒரு குருவிடம் சேர்த்தார். அவருடன் எப்பொழுதும் வேமனார் திரிந்து கொண்டே இருப்பார். ஒருநாள் ஆசிரியர், நீராட‌ ஆற்றங்கரைக்குச் சென்றார். வேமனனும் பின் தொடர்ந்தார். குரு, நீராட ஆடைகளை எல்லாம் கலைந்து வேமனாரிடம் கொடுத்து;

“நான் குளித்துவிட்டு உன்னை அழைத்தால், நீ..நான் கொடுத்த ஆடைகளை சகதியில் படாமல் கொண்டு வந்து, என்னிடம் கொடுக்க வேண்டும் புரிந்ததா?’’ என்று வேமனாரிடம் கூறினார். வேமனும், “சரி.. சரி..’’ என்று தலையை ஆட்டிக்கொண்டு, ஆசிரியர் கொடுத்த உடையை தன் மடியின் மீது வைத்திருந்தார். குருநாதர் குரல் கொடுத்த உடனே, ஆடையை தூக்கி பிடித்துக் கொண்டு, குருவை நோக்கி ஆற்றங்கரையோரம் ஓடினார், வேமனார். ஓடும் போது, கையில் பிடித்திருந்த ஆடையில், சேறு தெறித்தது. அந்த காட்சியை கண்ட குருவிற்கு, கடும் கோபம் வந்தது;“நான் என்ன சொன்னேன், நீ இப்படி சகதியில் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாயே?’’ என்று அவனை நன்கு வசைப்பாடியபடி கரைக்கு வந்தார். அங்கே பாறை ஒன்று இருந்தது. அதைப் பார்த்தவர், கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து வேமனார் கையில் கொடுத்தார்.

“இந்த குச்சியினால் நீ, ராமா.. ராமா… என்று எழுது. அப்பொழுதாவது உனக்கு, சொல்வதைக் கேட்கும் ஞானம் வருகிறதா.. என்று பார்க்கலாம்’’ எனகூறி விட்டு, வீட்டிற்குக் கிளம்பினார். வேமனனும், ராமா… ராமா… என்று குச்சியினால் எழுதினார். குச்சி உடைந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், ஆசிரியர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டும் அல்லவா? வேறு ஒரு குச்சியைத் தேடினார், வேமனார். அவருக்கு வேறு ஒரு குச்சி கிடைக்கவில்லை. குச்சிக்கு பதில், தன்னுடைய ஆள்காட்டி விரலில், ராமா… ராமா… ராமா.. என்று எழுதத் தொடங்கினார். அவருடைய சிந்தனை ஓட்டத்தில், ஆசிரியர் சொன்னபடி நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

அதனை ஒரு லட்சியமாகக் கொண்டு, எழுதிக் கொண்டே இருந்தார். குருநாதர் உணவு சாப்பிட்டுவிட்டு, சற்று ஓய்வுக்காகபடுத்திருந்தார். திடீரென்று முழிப்பு வந்தது. வேமனார், நினைவுக்கு வந்தான். விரைந்து வந்தார். அவன் செயலை கண்டு திகைத்து நின்றார்.அவர், ராமா.. ராமா.. என்பதை நிறுத்தாமல் ரத்தக்கறையோடு, விரலில் எழுதுகின்ற பங்கினை பார்த்ததும், அவருடைய உள்ளத்தில் தவறு செய்துவிட்ட குற்ற உணர்ச்சி மேலோங்கியது. வேமனார் லட்சிய நோக்கு விடியலை நோக்கி‌ச் செல்கிறது என்பதை உணர்ந்தார். அப்படி சிறுவயது முதலேயே இலக்கை நோக்கி பயணித்தவர், வேமனார்.

தாசியோடு திருமணமா?

ஆனால், காளைப் பருவம் அடைந்ததும், வேமனனுடைய வாழ்க்கை நிலை திசை மாறியது. ஒருநாள் தாசி ஒருத்தியை கண்டார். அவளையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தன் வீட்டை மறந்து அவள் காலடியிலே விழுந்து கிடந்தார். அண்ணி நரசாம்மா, அவர் மனநிலை மாற வேண்டும் எனத் தெய்வத்திடம் பிரார்த்தித்தாள். தாசியானவள், வேமனாரை விட்டு விலக, மனதுக்குள் எண்ணினாள்.

மணந்தால் மகாதேவி என்பது போல, உன்னையே மணப்பேன் என பிடிவாதம் பிடித்தார். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, வேமனனை பார்த்து தாசிபெண்;“உங்களுடைய குடும்ப நகைகள் அனைத்தும் எனக்கு வேண்டும். அதுபோக, உங்கள் அண்ணியின் மூக்குத்தியும் எனக்கு வேண்டும்’’ எனக் கேட்டாள். மூக்குத்தி என்பது ஒரு பெண்ணிற்கு மங்கலத்தின் அடையாளம், தாலிக்கு இணையானது. எந்த பெண்ணும் கழற்றி கொடுக்கவே மாட்டாள். அதை எனக்காக உன் அண்ணியிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்தால், நம் உறவு தொடரும். இல்லை எனில் இதோடு நாம் நிறுத்துக்கொள்வோம் என்றாள்.

வேமனார், “பெற்று வருகிறேன் பார்’’ எனக் கூறிவிட்டு, வேகவேகமாக அண்ணியிடம் சென்று அவள் கேட்டதைத் தருமாறு ‌கேட்டார். அண்ணி மறுக்காமல் குடும்ப நகைகள், வைர மூக்குத்தியை கழற்றி கொழுந்தனிடம் கொடுத்தவாறு;

“ஒரு நிபந்தனை உண்டு வேமனா’’ என்றாள்.
“என்ன அண்ணி’’?

“அவள் முழு வெளிச்சத்தில் நிர்வாணமாக ஏழடி நடந்து வந்து, நகைகள், மூக்குத்தியை உன்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு அவள் நடந்து வந்தால், குலமகள் அல்ல. வர மறுத்துக் கூறினால், நிச்சயம் உன் மனதிற்கு ஏற்றவளாக, இருப்பாள்’’ எனக் கூறி விடை தந்து அனுப்பினாள். அவளிடம் நகைகளை காட்டியதும், பிரம்மித்து போனவள், அதனை தொட வந்தாள்.

“இப்பொழுது தொடக் கூடாது. நீ ஏழடி பின்னே நகர்ந்து, வெளிச்சத்தில் ஆடையின்றி நடந்து வந்து, இந்த நகைகளை பெற வேண்டும்’’ என்று வேமனார் கூறியதும்,
“நீங்கள் இவ்வளவு நகைகள் கொடுக்கிறீர்கள் என்றால் இந்த வெளிச்சம் என்ன இன்னும் வெளிச்சத்தில்கூட ஏழடி நடனமாடியே நடந்து வருவேன்’’ என்று பேராசையை முகத்தில் காட்டினாள். பின்னர் மடமட ஆடைகளை களைந்து நடந்து வந்தாள். இக்காட்சியை கண்டதும், கேவலம் இந்த சதைக்காக வா.. நாம் ஆசைப்பட்டோம்? என்று எண்ணி, அவனுடைய மனம் மாறியது. அப்படியே அவளை விட்டுவிட்டு, அந்த வாழ்வில் இருந்து மீண்டார், வேமனார். அதன் பின் லம்பிகா சிவயோகி என்பவரிடத்தில் ஞான உபதேசம் பெற்றார்.

தும்மட்டி விதையில் தங்கமணிகள்

பாறை பூமியாக இருந்த நிலத்தை செப்பனிட்டு விவசாய நிலமாக்கினார், வேமனார். அதில், தும்மட்டி காய் விதைகளை விதைத்தார்.“கஷ்டப்பட்டு பாறைபூமியை மாற்றியவன், நெல்லை விதைக்காமல் தும்மட்டிக்காயை போட்டு இருக்கான் பாரு, இப்படியும் பைத்தியம் இருக்கு போல’’ என்று மக்கள் வசை பாடினர். ஊர் மக்கள், “தும்மட்டி விதையினால் எந்த ஒரு பயனும் இல்லை அல்லவா?’’ என்று நினைத்தனர். தும்மட்டிக்காய் நன்றாக விளைந்து அறுவடை செய்ய வேண்டிய நேரம் வந்தது. ஊர் மக்களை நோக்கி, அறுவடை செய்ய வருமாறு அழைத்தார். அறுவடை செய்ய யாரும் வரவில்லை. ஒருசிலர் மட்டும், வறுமையின் காரணமாக வந்தனர்.

அறுவடை முடிந்த பின்பு, அறுவடை செய்தவருக்கு கூலி கொடுக்க பணம் இல்லாமல் தடுமாறினார் வேமனார். அறுவடை செய்த காய்களையே கூலியாக அவர்களுக்கு வழங்கினார். முகச்சுழிப்புடன் பெற்றுச் சென்ற கூலி ஆட்கள், வீட்டில் சமையல் செய்ய தும்மட்டிக்காயை எடுத்து அருவாமணையில் அரிந்தனர். அரிந்த தும்மட்டிக்காய் விதையில் இருந்து, பொல பொலவென தங்கமணிகள் கொட்டின.

அதைப் பார்த்ததும், அதிசயத்தைப் போல குடியானவன், மொத்த காயையும் எடுத்து அரிந்தான். அத்தனை காய் விதைகளிலும் தங்கம் கொட்டின. நெற்போர் எப்படி குவிந்து கிடக்குமோ, அதுபோல தங்க விதைகள் குவிந்து கிடந்தன. அதை அளப்பதற்கு ஒரு படியை எடுத்து அளந்து அளந்து பானையிலே கொட்டி வைத்தனர். இந்த செய்தியானது ஊர் மக்களிடத்திலே பரவியது. உடனே அனைவரும் நாம் எடுத்துச் சென்ற தும்மட்டிக்காயை உடனே அரிந்து பார்த்தார்கள். அதிலும் விதைகள் தங்கமணிகளாக கொட்டின.

இதனை அறிந்த ஊர்க்காரர்கள், “நாமும் ஏன் இவனுடைய பண்ணையிலே வேலைக்குச் செல்லக்கூடாது?’’ என வம்பு பேசி, அனைவரும் அவனிடத்தில் போட்டி போட்டு கொண்டு, நான் நீ என்று வேலைக்குச் சென்றனர். வேலைக்கு சேர்ந்த அனைவருக்கும் கூலியாக தும்மட்டிக்காயை கொடுத்தார், வேமனார்.ஒரு சில சோம்பேறிகள், நாம் ஏன் இவனிடம் வேலை செய்து கூலிபெற வேண்டும் என்று, தாங்களே தும்மட்டிக்காயை இரவு நேரத்தில் நிலத்தில் திருடினர். அக்காய்களை வீட்டில் எடுத்துச் சென்று, அரிந்துப் பார்த்தால், விதைகளில் இருந்து புழுக்கள் விழுந்து அவர்களை கடித்தது.

“வேமனா… வேமனா… எங்களை காப்பாற்று’’ என்று கதறிய அடுத்த நொடியே, அவை அத்தனையும் மாயமாக மறைந்தன. இப்படி ஒரு அதிசயத்தை செய்து காட்டியவர்தான் வேமனார். மக்கள், அவரின் அற்புதமான தத்துவத்தையும், வேதாந்தத்தையும் கேட்டு மகிழ்ந்தனர். திகம்பரராக, ஊர் ஊராக சுற்றி, பாடல்கள் எழுத தொடங்கினார். அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும், அவர் தம் வாழ்வில் பட்ட துன்பங்கள், தனக்கு கிடைத்த அனுபவங்கள், நல்ல – கெட்ட செய்திகள் மற்றும் பாமர மக்கள் புரிந்து கொள்ளும்படி “ஆடலவதி’’ என்ற இனிய பா வகையில் அவர் பாடலாக பாடினார்;

“செப்பு லோனி ராயி செவி லோனி ஜோரீக
கண்டியந்து நலுசு காலி முல்லு
இண்டிலோனி போரு இந்திந்த காதையா
விஸ்வதாபி ராமா வினர வேமா’’

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் போராட்டத்தால் விளையும் துன்பம், எத்தகையது என்பதனை அழகாகப் படம்பிடித்து காட்டு
கிறார். காலில் அணியும் செருப்பில், சிறிய கல் புகுந்து கொண்டால், எளிதாக நடக்க முடியுமா? காதில் புகுந்த ஈ ரீங்காரம் செய்தால், எப்படி இருக்கும்? அவ்வாறே கண்ணில் தூசி விழுந்து உறுத்தும் போதும், காலில் தைத்த முள்ளும் வலிக்கும் என்பதனை குடும்ப பிரச்னைகளை நாசுக்காக ஒப்பிடுகிறார், வேமனார்.

“குக்க தின்ன வாடு குருலிங்க ஜங்கம்பு
பந்தி தின்னவாடு பரம யோகி
யேனுகு தின்னவாடு யெந்த ஞானிரா
விஸ்வதாபி ராமா! வினரா வேமா!’’

பாடலை மேம்போக்காக பார்க்கும்பொழுது கருத்தை அறிந்து கொள்வது சிரிப்பாகத்தான் இருக்கும். நாயை தின்றவன் நற்குரு ஆவான், பன்றியைத் தின்றவன் பரமயோகி ஆவான், யானையைத் தின்றவன் நல் யோகியாவான். இதையெல்லாம் தின்றால் நாம் யோகி ஆகிவிட முடியுமா என்ன? என்று நாம் நினைத்தால், அது தவறு. அந்த பாடலின் உட்கருத்தை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, எதையுமே பிறருக்காக இல்லாமல் எல்லாம் தனக்கே என நினைத்து எனது என்னும் செருக்கால் குரைக்கின்ற நாய்த் தன்மையை கொன்றவர்கள் நல்ல குருவினை அடைந்தவராவார். தாழ்ந்த இடத்தையும், கெட்ட பொருளையும் தேடி திரியும் பன்றியின் இழி குணத்தைக் கொன்றவர்கள் பரமயோகி ஆவார்கள்.

நான் நான் என்ற அகங்காரத்தால் மதம் கொண்ட யானையைப் போல், உள்ளதே எழும் ஆணவத்தை வென்றவர்களே, நல்ல ஞானியாவார் என்பதை தன்னுடைய அனுபவ அறிவால் எளிமையாக விளக்கி இருக்கிறார்.

பொன்முகரியன்

The post தும்மட்டி விதைகளில் தங்கமணிகள் appeared first on Dinakaran.

Tags : Goldilocks ,Kadapa District ,Royalaseema Gandhi ,Kota, Weymanar ,
× RELATED கல்லால் முகம் சிதைத்து பெண் கொலை: கணவரின் சிறை நண்பருக்கு வலை