×

ஞானத்தின் சிகரமான அம்பிகை

சென்ற இதழின் தொடர்ச்சி…

ஸுதா ஸாகர மத்யஸ்தா

சரி, இதற்கெல்லாம் உட்பொருள் அத்யாத்மிகமான அர்த்தம் இருக்க வேண்டுமல்லவா.. அப்படி என்ன காண்பிக்கிறார்கள். இல்லையெனில், இது என்ன ஆகிவிடுமெனில், ஒரு duality அல்லது குழப்பக்கூடிய தன்மையைக் காண்பித்துவிடும். என்ன… எல்லாமே ஒன்று ஒன்று சொல்லிவிட்டு இப்போது ஸ்தானத்திலேயே இரண்டு ஸ்தானம் இருக்கிறது என்று சொல்கிறார்களே… ஸூமேருவில் ஒன்று… ஸுதா சாகரத்தில் இன்னொன்று என்கிறார்களே என்று குழப்புகிறார்களே என்று தோன்றிவிடும். அப்போது உபாசகனுக்கு குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்பு வந்துவிடும். அப்போது, நான் இதை உபாசிக்க வேண்டாமா… அல்லது அதை உபாசிக்க வேண்டுமா… என்கிற குழப்பம் வந்துவிடும். ஸ்ரீநகரம் என்பதில் இரண்டு வேறுபட்ட கருத்து இருந்ததெனில் நாம் எதை தியானம் செய்வது? ஸ்ரீவைஷ்ணவத்தில் இப்படி இரண்டு ஸ்தானங்கள் உள்ளதே. நான் எதை தியானம் செய்வது?

ஆனால், இப்படி இரண்டு இடங்களையும் சொல்வதால் எந்த குழப்பமோ அல்லது சந்தேகமோ வேண்டியதில்லை. ஏனெனில், இங்கு வசின்யாதி வாக் தேவதைகள் நமக்கு duality இரட்டைத் தன்மையை காண்பித்துக் கொடுக்கவில்லை. குழப்பத்தையோ சந்தேகத்தையோ உண்டாக்கவில்லை. இங்கு பெரிய revelation ஒன்று நடக்கிறது. ஒரு பெரிய விஷயத்தை நமக்குப் புரியவைத்துவிடுகிறாள். மீண்டும் ஒருமுறை நினைவில் கொள்வோம். ஸுமேரு ஸ்ருங்கத்தில் மூன்று ஸ்ருங்கங்கள் இருக்கின்றன. பிரம்ம, விஷ்ணு, ருத்ர மூன்று ஸ்ருங்கங்களின் உச்சியில் இருக்கிறது. இந்த மூன்று உச்சி களைத் தாண்டி நான்காவதாக உச்சி இருக்கிறது. அதில் அம்பாள் ஸ்ரீநகரம்… என்று எல்லாவற்றையும் பார்த்தோம். இப்போது நாம் இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த ஸுமேரு மத்ய ஸ்ருங்கம் என்பது உயரமாக இருக்கிறது. மிகமிக உயரமாக இருக்கிறது. நம்மால் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு உயரமாக இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தினுடைய மத்தியத்தில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தினுடைய மத்தியத்தினுடையதில் உயரமாக இருக்கிறது என்பது எதைக் காண்பித்துக் கொடுக்கிற தெனில், ஞானத்தை நமக்கு காண்பித்துக் கொடுக்கிறது.

ஞான நிலையை காண்பித்துக் கொடுக்கிறது. இருப்பதிலேயே நாம் சொல்லக் கூடிய highest point எதுவெனில், ஞானம். அப்போது ஸுமேரு மத்ய ஸ்ருங்கம் என்கிற உயர்ந்த உயரமான பொருள் நமக்கு ஞானத்தை காண்பித்துக் கொடுக்கிறது.இப்போது ஞானத்தினுடைய உச்சியில் அம்பாள் இருக்கிறாள் என்பது தெரிந்து விட்டது. வேதம்… வேதத்தினுடைய உச்சியில் உபநிஷதம் இருக்கிறது. அந்த வேதத்தினுடைய உபநிஷதம் எங்கு இருக்கிறதெனில் அம்பாளினுடைய பாதத்தில் இருக்கிறது. அப்போது ஞானத்தினுடைய உச்சியில் அம்பாள் இருக்கிறாள் என்பது இவனுக்கு தெரிந்துவிட்டது. ஆனால், அந்த ஞானத்தை நாம் அடைய வேண்டுமோ… குரு அனுக்கிரகம். எல்லாமும் சரிதான்… அந்த உச்சியை வந்து எப்படி அடைவது என்கிற மலைப்பு ஒரு திகைப்பு இருக்குமல்லவா… அந்த திகைப்பு வரும்போது அதேநேரத்தில் ஒரேசமயத்தில் நம்மிடம் இன்னொரு விஷயம் காண்பிக்கப்படுகின்றது.

நீ இவ்வளவு பெரிய உச்சியில் அதாவது ஞானத்தினுடைய உச்சியில் இருக்கிறாள் என்று திகைத்துப் போக வேண்டாம். அதே அம்பாள் எங்கு இருக்கிறாளெனில், ஸுதா ஸாகரம் என்கிற கடலுக்கு நடுவே இருக்கிறாள். அப்போது கடலுக்கு நடுவே இருப்பவளை மட்டும் அடைந்து விடலாமா என்றால், இங்கு கடல் என்பது நமக்கு எதைக் காண்பித்து கொடுக்கிறதெனில், கடலுடைய தன்மையை நாம் இங்கு பார்க்க வேண்டும். கடலினுடைய தன்மை என்னவெனில், ஆழம். மலையினுடைய தன்மையென்பது உயரம். எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமிருக்குமோ அது கடல். கடலுடைய தன்மை ஆழம். இங்கு ஆழமான கடல்… அம்ருதக் கடல் எதைக் காண்பித்துக் கொடுக்கிறதெனில் பக்தியைக் காண்பிக்கின்றது. ஸுதா ஸாகரம் என்கிற அம்ருதக் கடலானது பக்தி. ஆழமான பக்தி. எப்போதுமே நாம் ஞானத்தைச் சொல்லும்போது அவர் உயர்ந்த ஞானமுடையவர் என்று சொல்லுவோம். ஆழமான ஞானமுடையவர் என்று சொல்ல மாட்டோம். ஆழமான பக்தியை உடையவர் என்று சொல்வோமே தவிர உயர்ந்த பக்தியை உடையவர் என்று சொல்ல மாட்டோம். பக்தி என்றாலே ஆழம். ஞானம் என்றாலே உயர்ந்த ஞானம். இப்போது இவன் ஸுமேரு என்கிற உயரமான உயர்ந்த இடத்தை பார்த்துவிட்டு அடடா… இதை எப்படி அடைவது என்று திகைக்கும்போதே… அவள் எவ்வளவுக்கு எவ்வளவு ஞானத்தின் உச்சியில் இருக்கிறாளோ… அதேமாதிரி உன்னுடைய பக்தியை கொண்டு வந்தாயானால் அந்த பக்தியை அவள் அம்ருதக் கடலாக்கி ஆழமான அம்ருதக் கடலான ஸுதா ஸாகரத்திலும் அவள் இருப்பாள். நாம் ஞானத்தை வந்து பார்த்து திகைக்கும்போது கைகொடுக்கக் கூடியது எதுவெனில் பக்தியே ஆகும்.

இப்போது இங்கு கவனியுங்கள். அம்பாள் ஸுமேருவில் இருக்கிறாள்… ஸுதா ஸாகரத்தில் இருக்கிறாள்… இதென்ன இரண்டு ஸ்தானமா என்று கேட்டால், உயரமான ஞானத்தின் உச்சியிலும் இருப்பாள். ஆழமான பக்திக்கு நடுவிலும் இருப்பாள். ஆழமான பக்திக்கு நடுவில் இருக்கிறாள் என்பதுதான் ஸுதா ஸாகர மத்யஸ்தா… என்பதாகும். பரவாசுதேவனாக வைகுண்டத்தில் இருப்பார். ஞானமடைந்த நித்ய சூரிகள் சேவிக்கும்படிக்கும் இருப்பார். அவரேதான் நமக்காக திருப்பாற் கடலில் வியூக மூர்த்தியாக ஸ்ரீராப்தியில் பள்ளிகொண்ட கோலத்தில் தியானம் பண்ணும்படியாக இருக்கிறாள். அதற்குப்பிறகு அவர் விபவ அவதாரம் எடுக்கிறார். அந்தர்யாமியாக இருக்கிறார். அர்ச்சாவதாரமாக இருக்கிறார். கோயில்களில் சேவை சாதிக்கிறார். இதெல்லாம் ஸ்ரீவைஷ்ணவத்தில் ஐந்தாகச் சொல்கிறார். ஸ்ரீவித்யா இரண்டு இடத்தில் இருக்கிறாள் என்று சொல்வது, இரண்டும் வெவ்வேறு இடங்களாக இல்லாமல் இரண்டும் சந்திக்கின்ற புள்ளி என்பதாக ஞானத்தையும் பக்தியையும் சொல்கிறோம்.

அவன் பரமபதநாதனாக வைகுண்டத்தில் இருந்தாலும், நித்ய சூரிகளுக்கு ஞானிகளுக்கு சேவை சாதித்துக் கொண்டிருந்தவன், பக்தர்கள் அடையும்படி, திருப்பாற்கடலில் வியூக மூர்த்தியாக சயனித்துக் கிடக்கிறான். கஜேந்திரன் கூப்பிட்டபோது எங்கிருந்து எழுந்து வந்தாரெனில், இந்த ஸ்ரீஷீராபதி பாற்கடல் சயனத்திலிருந்துதான் எழுந்து வந்தார். ஏனெனில், கஜேந்திரனுடைய ஞானத்திற்கு அங்கு விஷயமில்லை. கஜேந்திரனுடைய பக்திதான் அங்கு விஷயம். மனுஷ ரூபம்கூட இல்லை. கஜேந்திரன் என்கிற யானை ரூபத்தில் இருந்த பக்தனுக்காக, பக்தி மயமாக இருக்கக் கூடிய திருப்பாற்கடலில் இருந்துதான் எழுந்திருந்து வந்தான். ஸ்ரீவைஷ்ணவத்தில் எப்படி இப்படி சொல்கிறோமோ… அதேபோல ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் ஞானத்தின் உச்சியில் ஸுமேரு ஸ்ருங்கத்தில் எப்படியிருக்கிறாளோ… அதேபடிக்கு ஆழமான பக்தியைக் காண்பிக்கக்கூடிய ஸுதா ஸாகர மத்யஸ்தாவிலும் இருக்கிறாள்.இது external (வெளிப்புறமாக) ஆக பார்க்கும்போது, இரண்டாகத் தெரியும். இவனுக்கு ஞானானுபவம் ஆகும்போது இது இரண்டும் ஒன்று என்று தெரியும். ஞானமும் பக்தியும் வெளியிலிருந்து பார்க்கும்போதுதான் வெவ்வேறாகத் தெரியுமே தவிர, அனுபவத்தில் வரும்போது ஒன்றோடொன்று கலந்திருப்பதும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது என்பதும் தெரியும்.
(சுழலும்)

The post ஞானத்தின் சிகரமான அம்பிகை appeared first on Dinakaran.

Tags : Ambika ,Suda Sakara Mathyasta ,
× RELATED ஞானத்தின் சிகரமான அம்பிகை