சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம், திருநெல்வேலியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.
காலம் : பொ ஆ.10-ஆம் நூற்றாண்டில் இவ்வாலயத்தில் வழிபாடுகள் நடந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன. இன்றுள்ள அழகிய சிற்பங்களுடன் கூடிய ஆலய கட்டுமானங்கள், விஜயநகர நாயக்க மன்னர்கள் (15-16 ஆம் நூற்றாண்டு) ஆட்சியில் அமைக்கப்பட்டதாகும்.
தமிழக ஆலயங்களிலே சிற்ப எழில் நிறைந்த ஆலயங்களுள் ஒன்று திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பி பெருமாள் கோயிலில், நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
தாயார்: குறுங்குடி வல்லி நாச்சியார் திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை கொண்டது.
‘‘எங்ஙனயோ, அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்,
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும், செல்கின்றது என் நெஞ்சமே!’’
– நம்மாழ்வார், திருவாய்மொழி – ஐந்தாம் பத்து
பிரமாண்டமான நுழைவு வாயில்களின் கூரை உட்புறங்களில் மேல் விதானங்களில் உள்ள சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் வியப்பில் ஆழ்த்தும். ஆனால், பெரும்பாலானோர் இவ்விதானங்களை அண்ணாந்து பார்க்கத் தவறி விடுகின்றனர். ஆலய வெளிப்புறச் சுவர்கள், கோஷ்டங்கள் ஆகியவற்றில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களின் பேரழகும், நுணுக்கமும் காண்போரைக் கவரும்.
வைணவ ஆலயமாக இருந்தாலும், விஷ்ணு அவதாரக் காட்சிகளுடன் (கஜேந்திர மோட்சம், ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள்), பல்வேறு சிவ வடிவங்களும் (கஜசம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி) அற்புத சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நவ நாரி குஞ்சரம்: ‘நவ’ – ஒன்பது. ‘நாரி’ – பெண். ‘குஞ்சரம்’ – யானை. ஒன்பது பெண்கள் கலவைச் சிற்பமாக, யானை போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிற்பம் காண்போரைக் கவரும்.பஞ்சநாரி துரஹா: (‘துரஹா’ – குதிரை) ஐந்து பெண்கள் கலவையாகக் குதிரை வடிவில் நிற்பதும், அதன் மேல் மன்மதன் அம்பு விடும் சிற்பமும் குறிப்பிடத்தக்கது,
மது ஜெகதீஷ்
The post திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம் appeared first on Dinakaran.