அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை வந்த வாலிபர் ரயிலில் திடீர் மரணம்: ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை: தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் (29), காய்கறி கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கு சில மாதங்களாகவே உடல்நல பிரச்னை இருந்து வந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களாக அஜித்குமாரின் கால்கள் அதிகப்படியான வீக்கம் ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சங்கரன் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி சென்னைக்கு வந்துள்ளார். அப்போது விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்த போது மழையின் காரணமாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், நீண்ட நேரமாக காத்திருந்த அஜித்குமார் முன்கூட்டியே கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாறி ஏறியுள்ளார்.

ரயில் கிளம்பிய சிறிது நேரத்திலே அஜித்குமார் மயக்கமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அஜித்குமாருக்கு அவரது சகோதரர் போன் செய்த போது நீண்ட நேரமாக எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் இது குறித்து எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தை வந்து அடைந்ததும் மருத்துவர்கள் அஜித்குமாரை பரிசோதனை செய்த போது, இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து எழும்பூர் ரயில்வே போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா? அல்லது மஞ்சள் காமாலை பிரச்னையால் உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை வந்த வாலிபர் ரயிலில் திடீர் மரணம்: ரயில்வே போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: