சென்னை: இந்தியாவில் முதல்முறையாக நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனை செயல் திட்டத்தை அப்போலோ மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனை செயல் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அப்போது நுரையீரலியல் சிறப்பு மருத்துவர்கள் ஸ்ரீதர் ரவிச்சந்திரன், வந்தனா, ஜெபின் ரோஜர் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: நுரையீரல் புற்றுநோய் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளில் 5.9 சதவீத பங்கினையும் மற்றும் இறப்புகளில் 8.1 சதவீத பங்கினையும் கொண்டுள்ளது.
50 மற்றும் 80 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வயது பிரிவிலுள்ள நபர்கள், நுரையீரல் புற்றுநோய்க்கான எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள், புகைப்பிடிக்கும் நபர்கள் மற்றும் குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் வரலாறு உள்ள நபர்கள் ஆகியோருக்கு நுரையீரல் புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. நுரையீரல் புற்றுநோய், உலகளவில் அதிக ஆபத்தான புற்றுநோய்களுள் ஒன்றாக இருக்கிறது; ஆனால், ஆரம்பத்திலேயே இதை கண்டறிவது, பாதிக்கப்பட்டவர்கள் உயிர்ப்பிழைத்து வாழும் வாய்ப்புகளை குறிப்பிடத்தக்க அளவு மேலும் மேம்படுத்துகிறது. நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனை செயல் திட்டம் (லங்-லைஃப் ஸ்க்ரீனிங்) மூலம் அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களை தொடக்கத்திலேயே அடையாளம் காண முடியும்.
இத்திட்டமானது, குறைந்த கதிர்வீச்சுள்ள சிடி ஸ்கேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. கதிர்வீச்சுக்கு வெளிப்படுத்தலை இது குறைப்பதோடு, நோயறிதலில் துல்லியத்தை மிக அதிகமாக்குகிறது. மேலும் நுரையீரல் செயல்பாடு சோதனை, மருத்துவர்கள் உடன் கலந்தாய்வு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. சிகிச்சை அளிக்கக்கூடிய கட்டத்தில் நுரையீரல் புற்றுநோயை கண்டறிவதன் மூலம் சிறப்பான சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post இந்தியாவில் முதல்முறையாக நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனை செயல் திட்டம்: அப்போலோ மருத்துவமனை அறிமுகம் appeared first on Dinakaran.