திரைப்பட விமர்சனம் வெளியிட தடை கோரி மனு ஒன்றிய, மாநில அரசு, யூடியூப் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின. இந்த பின்னணியில், படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிடுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைகிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாவதால், படத்தை பார்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுகிறது.

படத்தில் நடித்த நடிகர், இயக்குனர் குறித்து அவதூறு பரப்பப்படுகிறது என்றார். இதையடுத்து நீதிபதி, அவதூறு பரப்புவது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கலாம். விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் என்பதால், பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சில படங்கள் நல்ல விமர்சனங்களை பெறுகிறது. இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் யூடியூப் நிறுவனம் ஆகியவை பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post திரைப்பட விமர்சனம் வெளியிட தடை கோரி மனு ஒன்றிய, மாநில அரசு, யூடியூப் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: