செங்கல்பட்டு: மாடுகளை மேய்க்க சென்றபோது, பாலாற்றில் சிக்கிய ஒரு பெண் உள்பட மூன்று பேர் தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா காவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கவுதம் (25), அஜித் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தி (30) உள்ளிட்ட மூவரும் நேற்றுதினம் பாலாற்று பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் பாலாற்றையொட்டி மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்துள்ளது. அதனை கவனிக்காமல் பாலாற்றின் நடுத்திட்டில் மூவரும் சிக்கித்தத்தளித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகும் மூலம் தண்ணீரில் தத்தளித்த ஒரு கன்றுக்குட்டி மற்றும் ஒரு பெண் உள்பட மூன்று பேரையும் உயிருடன் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். உடனுக்குடன் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததால் மூன்று பேரையும் உயிருடன் மீட்க முடிந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாடுகளை மேய்க்க சென்றபோது பாலாற்றில் சிக்கிய பெண் உள்பட மூன்று பேர் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.