×
Saravana Stores

செங்கல்பட்டு மாவட்டத்தில் குப்பை கழிவுகளால் செயலிழந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்: உள்ளாட்சி நிர்வாகங்கள் அவதி

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி சேரும் குப்பை கழிவுகளால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலிழந்துள்ளது. இதனால், குப்பைகளை அகற்ற முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுகாதாரத்தை பேணும் சிறிய நாடுகளானும் சரி, பெரிய நாடுகளின் நகரங்களானும் சரி குப்பைகளை அகற்றுவதில் இன்னும் சிரமமே படுகின்றனர் என்பது தெளிவு. இந்தியா போன்ற விழிப்புணர்வு அற்ற நாடுகளில் குப்பைகளை அகற்ற அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் எவ்வளவுதான் செலவழித்தாலும் அதில் வெற்றி காண முடிவதில்லை.

தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஒருசில மாவட்டங்களில் மட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பெயருக்கு மட்டுமே நடைெபறும் இந்த திட்டம் பொதுமக்களின் போதிய ஒத்துமைப்பின்மை, பணியாளர்களிடம் இல்லாத போதிய விழிப்புணர்வு ஆகியவற்றின் காரணமாக வெற்றி பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய 4 நகராட்சிகள், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கருங்குழி, அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு ஆகிய 6 பேரூராட்சிகளும், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், லத்தூர், காட்டாங்குளத்தூர், புனித தோமையார்மலை, சித்தாமூர் ஆகிய 8 ஒன்றியங்களில் அடங்கிய 359 ஊராட்சிகளும் உள்ளன.

ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகத்திலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல் படுத்தப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து குப்பைகளை பெறும் போதே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெற்றுக்கொண்டு அவற்றை திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்திற்கு கொண்டு சென்று அவற்றில் மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் அகற்றப்படும் குப்பைகள் வேங்கடமங்கலம் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டம் 10 சதவீத அளவிற்கு கூட மேற்கொள்ளப்படவில்லை. மறைமலைநகர், கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள கொளத்தூர் ஊராட்சியில் உள்ள குப்பை சேகரிக்கும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அங்கு, ஒரு லாரி குப்பைக்கு கட்டணமாக 1500 ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. இந்த, இரண்டு மையங்கள் தவிர ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும், பேரூராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்ட மையங்கள் செயல்பட்டாலும், அவை முழுமையாக செயல்படாத நிலை உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் குப்பைகளும், கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன.

போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவற்றை சேகரித்து செல்லும் பணியாளர்கள் ஏரிகள், குளக்கரைகள், கால்வாய்களில் அவற்றை கொட்டி விட்டு செல்கின்றனர். சில இடங்களில் அவற்றை எரிக்கவும் செய்கின்றனர். எரிக்கவே கூடாது என்று விதி இருந்தும் அந்த விதிமுறை அப்பட்டமாக மீறப்படுகிறது. குறிப்பாக, பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால் அவற்றிலிருந்து வெளியேறும் டயாக்சின் என்ற வாயு புற்றுநோய்க்கான மூலக்காரணியாக உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கு என்று கூறப்படும் தகரக் கொட்டகைகளும், கழிவுப்பொருட்களை சேகரிக்கும் தொட்டிகளும் காட்சிப்பொருட்களாகவே உள்ளன. ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர், படூர், சிறுசேரி, தாழம்பூர், கேளம்பாக்கம், புதுப்பாக்கம், மாம்பாக்கம், தையூர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ரெட்டிக்குப்பம், கோவளம், முட்டுக்காடு, திருவிடந்தை, பட்டிபுலம், நெம்மேலி ஆகிய ஊராட்சிகளிலும் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் போன்ற பேரூராட்சிகளிலும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக தினசரி டன் கணக்கில் குப்பைகள் சேருகின்றன.

இவ்வாறு, சேரும் குப்பைகளை ஒரு வாரம் அகற்றாமல் போனால் மலைபோல் அவை தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்களையும் பரப்புகிறது. போதிய வருவாய் இன்றியும், போதிய இடம் இன்றியும் பல்வேறு ஊராட்சி நிர்வாகங்கள் குப்பைகளை அகற்றவும், அவற்றை மறுசுழற்சி செய்யவும் வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் அவசியம், குப்பைகளை சேகரிக்கும் முறைகள், அவற்றை தரம் பிரித்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும், குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு இவற்றை பற்றிய போதிய புரிதலும், அறிவும் இருக்க வேண்டும், ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி குப்பைகளையும், கழிவுகளையும் பொதுமக்களிடமிருந்து சேகரித்து தரம் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் முன் வைக்கின்றனர்.

ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலை, செங்கல்பட்டு சாலை, வண்டலூர் சாலை, ஜிஎஸ்டி சாலை போன்றவற்றில் சமூகப் பொருளாதார அந்தஸ்து உயர்ந்து இருந்தாலும், இவற்றில் சாலையோரம் குப்பைகள்தான் இருபுறமும் தேங்கி கிடக்கின்றன. இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிமாநில பிரதிநிதிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் இவற்றைப் பார்த்து முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

* ஆபத்தை விளைவிக்கும் மருத்துவ கழிவுகள்
மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளும் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் கழிவுகளை அப்படியே பிளாஸ்டிக் கவரில் சுற்றி சாலைகளில் வீசி விடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இவ்வாறு, வீசப்படும் மருந்து குப்பைகளில் இருந்தும், ஊசிகளில் இருந்தும் வெளியேறும் பல ஆபத்தான ரசாயனக் கழிவுகள் எதிர்காலத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

* கடலுக்கு செல்லும் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள்
கானத்தூர் ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு, கோவளம், கேளம்பாக்கம், படூர், முட்டுக்காடு, தையூர் ஆகிய இடங்களில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள், கழிவுகள், மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவை பக்கிங்காம் கால்வாய் வழியாக வங்கக்கடலை சென்று அடைகின்றன. மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, கடலுக்கு உள்ளே 20 கிமீ தூரம் சென்றால் குப்பை மலையையே பார்க்கலாம் என்கின்றனர்.

இவ்வாறு, கடலுக்கு உள்ளே செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் மீன்கள், ஆமைகளுக்கு ஆபத்தாக உள்ளதாகவும், மீன்கள் மூலமாக மீண்டும் அவை மனிதர்களை வந்து அடைவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் உண்ணக் கூடாத உணவுப்பட்டியலில் மீன் இனமும் சேர்ந்து விடும் ஆபத்துள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் குப்பை கழிவுகளால் செயலிழந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்: உள்ளாட்சி நிர்வாகங்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District ,Tiruporur ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக செங்கல்பட்டு...