திண்டுக்கல்லில் அனைத்து வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், நவ. 30: திண்டுக்கல் வணிகவரி துறை அலுவலகம் முன்பு அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்திய வாடகை ஒப்பந்தம் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வணிகர் சங்கம் மற்றும் தொழில் வர்த்தக சங்கம், ஹோட்டல் உரிமையாளர் சங்கம், சந்தை ரோடு வணிகர் சங்கம், போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இரும்பு வியாபாரம் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. வணிகர் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். தொழில் வர்த்தக சங்க மண்டல தலைவர் கிருபாகரன் முன்னிலை வகித்தார். இரும்பு வியாபாரம் மற்றும் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவசண்முகராஜா, ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ராஜ்குமார், அரிசி விற்பனையாளர் சங்க தலைவர் முகமது கனி, எண்ணெய் வியாபாரி சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், பொருளாளர் செந்தில் குமார், சந்தியா ரோடு வியாபாரி சங்க நிர்வாகி வீரபாண்டி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் கோரிக்கை மனுவை வணிகவரி துறை ஆணையரிடம் வழங்கினர். இதுகுறித்து தொழில் வர்த்தக சங்க மண்டல தலைவர் கிருபாகரன் கூறுகையில், ‘இந்த வரி விதிப்பு என்பது சிறு குறு தொழில்களை மிகவும் பாதிக்கும், ஆதலால் ஒன்றிய, மாநில அரசுகள் இந்த வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் வணிகர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும்’ என்றார்.

The post திண்டுக்கல்லில் அனைத்து வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: