திருச்சி, டிச.27: திருச்சி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் அரியலுார் இணை இயக்குநர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது அரசாணை (நிலை)6. 109, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்(எம்2) துறை, நாள்:7.11.2024-ல், பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவது, அவர்கள் நலன் உறுதி செய்தல் தொடர்பான பாதுகாப்பு குறித்த புத்தாக்கப் பயிற்சி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ரசாயனங்களை கையாள்வது தொடர்பான பாதுகாப்பு மற்றும் புத்தாக்கப்பயிற்சி அரியலூரில் நடந்தது.
திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். ரசாயன வகைகள் மற்றும் ரசாயனங்களை பாதுகாப்பாக கையாளுதல், முந்தைய விபத்துகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, பெரம்பலூர் மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அலுவலர் வீரபாகு, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை மற்றும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் எவ்வாறு தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பட்டாசுத்தொழிற்சாலைகளில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய தீத்தடுப்பு சாதனங்கள், அதன் வகைகள், அவற்றை பயன்படுத்தும் விதங்கள் மற்றும் தீத்தடுப்பு முறைகள் ஆகியன குறித்து விளக்கினார்.
திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் விமலா, பட்டாசு உற்பத்தியிலுள்ள அபாயங்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியன குறித்து விளக்கினார். அரியலூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் இளவரசி தொழிற்சாலைகள் சட்ட விதிகள் குறித்த பயிற்சியளித்தார். நிகழ்ச்சியில் பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறும்படம் திரையிடப்பட்டது. இப்பயிற்சியில் பதிவு பெற்ற 18 பட்டாசு தொழிற்சாலைகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள் சார்பில் அரியலூர் மாவட்டத்தின் அய்யாரப்பன் பேசினார். அரியலூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் நன்றி கூறினார்.
The post பட்டாசு உற்பத்தியில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்ன..? பாதுகாப்பு விதிமுறைகள் புத்தாக்க பயிற்சி appeared first on Dinakaran.