முன்னாள் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் காலமானார் அரசு மருத்துவ கல்லூரி உடற்கூறு ஆய்வு வகுப்பிற்கு உடல் தானம்: அமைச்சர் அன்பரசன் மாலை அணிவித்து அஞ்சலி

செங்கல்பட்டு: முன்னாள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் காலமானார். இவர் தனது உடலை ஏற்கனவே தானமாக எழுதி கொடுத்துள்ளநிலையில், அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வு வகுப்பிற்கு உடலை தானமாக, அவரது குடும்பத்தினர் வழங்கினர். இதில், அமைச்சர் அன்பரசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் மா.சா.முனுசாமி (70). கருங்குழி பகுதியை சேர்ந்த இவர், கடந்த 1984ம் ஆண்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவாக்கியவர்களில் ஒருவர். மேலும், இவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவராக 6 ஆண்டுகளும், மாநில பொருளாளராக 3 ஆண்டுகளும், மாவட்ட தலைவராக 15 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார்.

அப்போது, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு உள்பட பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கருங்குழி பகுதியில் வசித்து வந்த முனுசாமி நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே மரணமடைந்தார். ஏற்கெனவே தனது உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி உடற்கூராய்வு பிரிவுக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரது உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மா.சா.முனுசாமியின் குடும்பத்தினர் தானமாக வழங்கினர். அவரது உடலுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் தியாகராஜன், செங்கல்பட்டு நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவசங்கரன் உள்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

The post முன்னாள் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் காலமானார் அரசு மருத்துவ கல்லூரி உடற்கூறு ஆய்வு வகுப்பிற்கு உடல் தானம்: அமைச்சர் அன்பரசன் மாலை அணிவித்து அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: