திருத்தணி அருகே 2 பேருந்துகள் உரசி விபத்து: பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

திருத்தணி, நவ. 15: திருத்தணி அருகே, சாலைப் பணிகள் நடைபெற்று வரும் நெடுஞ்சாலையில், ஒரு வழி பாதையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தும், ஆந்திர அரசுப் பேருந்தும் உரசிக் கொண்டதில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளுர் மாவட்டம், திருத்தணில் இருந்து அரக்கோணம் செல்லும் மாநில நெடுஞ்சாலை வள்ளியம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு அருகில், சாலைக்கு நடுவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு வேலி அமைத்து ஒருவழிப் பாதையாக மாற்றி வாகனங்கள் மெதுவாக செல்ல நெடுஞ்சாலைத் துறையினர் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர்.

இந்நிலையில், திருத்தணியில் இருந்து நேற்று மதியம் தனியார் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டது. அப்பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்தனர். அதே நேரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து 30 பயணிகளுடன் ஆந்திர மாநில அரசுப் பேருந்து திருத்தணி நோக்கி வரும் போது, ஒருவழி பாதையை வேகமாக கடந்து செல்ல தனியார் பேருந்து ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியுள்ளார். இதனால், இரண்டு பேருந்துகளும் வேகமாக உரசிக் கொண்டது. இதில், தனியார் பேருந்து சாலையோர தடுப்பு வேலியில் மோதி நின்றது.

விபத்தில், இரு பேருந்துகளின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. இதனால், அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பேருந்துகளில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்துகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தடை சரி செய்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவாக செல்ல வேண்டுமென்று தனியார் பேருந்துகளை ஓட்டுநர்கள் அதிவேகமாக இயக்குவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், தனியார் பேருந்துகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post திருத்தணி அருகே 2 பேருந்துகள் உரசி விபத்து: பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: