மசோதா காலாவதி ஆன நிலையில் திருமண வயது விவகாரத்தில் அடுத்த வாரம் கருத்து கேட்பு: நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் குழந்தை திருமணத்தை தடுக்க, ஆண்களுக்கு நிகராக பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான திருத்தத்துடன், குழந்தை திருமண சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மசோதாவுக்கு பலமுறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே 17வது மக்களவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மசோதா காலாவதியானது.

ஆனாலும், இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரம் நிலைக்குழு கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங் தலைமையிலான இக்குழுவின் கூட்டத்தில், திருமண வயது அதிகரிப்பு தொடர்பாக ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர், பெண்களுக்கான தேசிய ஆணையம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இது குறித்து குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘‘மசோதா காலாவதி ஆனாலும், சம்மந்தப்பட்ட பிரச்னை குறித்து விவாதிக்க எந்த தடையும் இல்லை’’ என்றார்.

The post மசோதா காலாவதி ஆன நிலையில் திருமண வயது விவகாரத்தில் அடுத்த வாரம் கருத்து கேட்பு: நாடாளுமன்ற நிலைக்குழு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: