திருவள்ளூர், ஜன. 5: நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் ஒன்றியம், ஈக்காடு ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. நகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால் 100 நாள் வேலை பறிபோவதோடு, கிராமப்புற கட்டமைப்பு வளர்ச்சிகள் கேள்விக்குறியாகிவிடும், குடிநீர் வரி, சொத்து வரி ஆகியவை உயர்ந்துவிடும், இதனால் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி திருவள்ளூர் – செங்குன்றம் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் வாசுதேவனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு டிஎஸ்பி தமிழரசி மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் அறிவுறுத்தியதை ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அவர்களை பலவந்தமாக அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கலெக்டரிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் வாசுதேவன் அறிவுறுத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
The post நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டம் : போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.