ஊராட்சி மன்ற தலைவரை நீக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

செய்யூர்: சித்தாமூர் அருகே, ஊராட்சி மன்ற தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி, நெற்குணம் ஊராட்சி கிராம மக்கள் சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நெற்குணம் ஊராட்சி. இப்பகுதி ஊராட்சி தலைவராக தமிழரசி ராமலிங்கம் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த ஊராட்சியில் அடங்கிய வயலூர் கிராமத்தில், புதிதாக கல்குவாரி அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அவ்வூராட்சி தலைவர், குவாரி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பொதுமக்களுக்கு தெரியாமல் கிராம சபை கூட்டத்தில் குவாரி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஊராட்சியில் நடைபெறும் பணிகளில் ஊராட்சி தலைவர் பல்வேறு ஊழல்கள் புரிந்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், நேற்று அக்கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஊராட்சி மன்ற தலைவரை நீக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: