சோழிங்கநல்லூர், ஜூன் 5: மெட்ரோ வழித்தடம் 3 மற்றும் 5ஐ ஓஎம்ஆர் சாலையில் உள்ள வணிக கட்டிங்கள் வழியாக இணைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால்பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது.
இந்த பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3வது வழித்தடமான மாதவரம் – சிப்காட், 5வது வழித்தடமான மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான இரு வழித்தடங்களை ஓஎம்ஆர் சாலையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் 6வது மாடியுடன் இணைக்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில்: ஆலந்தூர் மெட்ரோ நிலையம் போலவே சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையம் கட்டப்பட உள்ளது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தின் தாழ்வாரம் 35 மீட்டர் உயரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தாழ்வாரத்தின் கீழ் பகுதியில் 3வது வழித்தடமும், மேல் பகுதியில் 5வது வழித்தடமும் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 வெளியேறும் மற்றும் நுழைவாயில் அமைக்கப்பட உள்ளது’ என்றனர்.
The post சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ 3 மற்றும் 5வது வழித்தடங்கள் வணிக கட்டிடம் வழியாக இணைப்பு: மெட்ரோ நிர்வாகம் திட்டம் appeared first on Dinakaran.