முருக்கம்பாக்கம் ஊராட்சியில் சேதமடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தால் அலுவலர்கள் அவதி: அகற்றி புதிதாக கட்டித்தர கோரிக்கை

செய்யூர், ஜூன் 6: பவுஞ்சூர் அடுத்த, முருக்கம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்டது முருக்கம்பாக்கம் ஊராட்சி. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியின் அருகே கடந்த 15 வருடங்களுக்கு முன் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டது. நாளடைவில் இக்கட்டிடம் வலுவிழந்து கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் இந்த விரிசல் வழியாக கசிந்து சுவர்கள் முழுவதும் ஈரம் கோர்த்துள்ளது.

மேலும், கனமழையின் போது கட்டடத்தினுள் மழை நீர் ஒழுகுவதால் அலுவலகப் பணியாளர்கள் அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தேவைகளுக்காக இங்கு வரும் கிராம மக்கள் கட்டிடத்தின் நிலையைக் கண்டு எப்பொழுது கட்டிடம் இடிந்து விழும் என்ற அச்சத்தில் அலுவலகத்திற்கு வரவே அஞ்சுகின்றனர். பழமை வாய்ந்த இந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய ஊராட்சி மன்றம் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவர் கிளியப்பனிடம் கேட்டதற்கு, ‘எங்கள் ஊராட்சிக்கு என இதுவரை போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், எந்த ஒரு ஊராட்சி பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித் தரக்கோரி மனு அளித்துள்ளேன். அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்’என்றார். எனவே, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி பழுதடைந்துள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post முருக்கம்பாக்கம் ஊராட்சியில் சேதமடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தால் அலுவலர்கள் அவதி: அகற்றி புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: