செங்கல்பட்டு, ஜூன் 7: பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழைமான நரசிம்ம பெருமாள் கோயில் தேர்விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் எழுந்தருளியுள்ள பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழைமான கோயில் ஆகும். இந்த கோயில் மலையை குடைந்து ஒரேகல்லில் செதுக்கப்பட்டு நெற்றியில் ஒரு கண்ணோடு அமையப்பெற்ற பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் என திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நரசிம்மர் பெருமாளை வைத்துத்தான் இப்பகுதிக்கு சிங்கபெருமாள் கோயில் என அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கோயில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவம் 10 நாட்கள் தொடர்ந்து மிக விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு வைகாசி உற்சவ திருவிழா கடந்த 31ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் நரசிம்மர் பெருமாள் அமர்ந்து வீதி உலாவாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் தொடர்ச்சியாக 7ம் நாளான நேற்று தேர் விழா நடைபெற்றது. இதில் நரசிம்மர் மற்றும் அகோபிலவள்ளி தாயார் சமேதமாக தேரினுள் அமர்ந்து தேர் வீதி உலா சென்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரின் வடம்பிடித்து பெருமாளின் ஆசியினை பெற்று மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
The post பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான நரசிம்ம பெருமாள் கோயில் தேர்திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.