மாணவியர் கொடி வணக்கம் பாடும்போது தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய ஆசிரியர்கள்: காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பரபரப்பு

காஞ்சிபுரம், ஜூன் 3: காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரேயுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய ஆசிரியர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 2024-25ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் மற்றும் பள்ளி தேர்வுகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு 36 நாட்கள் கோடை விடுமுறை விட்டிருந்தது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், என 914 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று காலை கோடை விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். வேறு பள்ளிகளில் இருந்து புதிய பள்ளிகளுக்கு சேர்ந்த மாணவ, மாணவிகளை பெற்றோர் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். கோடை விடுமுறை முடிந்து புத்துணர்ச்சியோடு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளில் காலை இறை வணக்கம் மேற்கொண்டனர்.

காலை இறை வணக்கம் கூட்டத்தில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அவர்களை ஊக்குவித்து கல்வி கற்பித்த ஆசிரியர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு மீண்டும் இதே போன்ற சாதனைகள் தொடர வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுரைகள் வழங்கினர்.இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாலுகா அலுவலகம் அருகே உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்கள் கொடி வணக்கம் பாடி கொண்டிருந்த பொழுது ஆசிரியர்கள் தேசியகொடியை தலைகீழாக ஏற்றப்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது, தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் பதட்டம் அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக தேசியக் கொடியை இறக்கி மாற்றி நேராக தேசிய கொடியை ஏற்றினர்.

The post மாணவியர் கொடி வணக்கம் பாடும்போது தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய ஆசிரியர்கள்: காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: