விருதுநகர் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்

விருதுநகர், அக்.25: விருதுநகர் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று முன்தினம் ஆந்திராவில் வழங்குவது போல் தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற தர்ணாவில் விருதுநகர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். தர்ணாவில் பங்கேற்று நேற்று அதிகாலை ரயில் மூலம் விருதுநகர் வந்தடைந்தனர். பழைய பஸ் நிலையத்தில் இருந்து அவரவர் ஊருக்கு சென்றனர். மலைப்பட்டி செல்வதற்காக நாகராஜ் உள்பட 12 பேரும் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது வந்த மலைப்பட்டி பஸ் பயணிகளை ஏற்றாமல் வேகமாக சென்றது.

இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ் நிலைய வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேற்கு போலீசார், அரசு போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்தி மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளிகளை ஏற்றாமல் சென்ற பஸ் டிரைவர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் புகார் மனு அளித்தனர்.

The post விருதுநகர் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: