ஷேக் ஹசீனா ராஜினாமா குறித்து கருத்து வங்கதேச அதிபர் பதவி நீக்கமா? இடைக்கால அரசு பதில்

டாக்கா: வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் கடந்த வாரம் வங்கதேச நாளிதழான மனாப் ஜமினுக்கு அளித்த பேட்டியில், ‘கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறும் முன் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான ஆவண ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை’ என்று கூறினார். இதனால் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைய காரணமாக இருந்த மாணவர் அமைப்பினர் அதிபர் முகமது ஷஹாபுதீன் தெரிவித்த இந்த கருத்தால் கொந்தளித்து கடந்த செவ்வாய்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு வருகிறார்கள்.

ராணுவ வீரர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதிபர் பதவியில் இருந்து முகமது ஷஹாபுதீனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் போராடி வருகிறார்கள். இதையடுத்து அதிபர் முகமது ஷஹாபுதீனை பதவியில் இருந்து நீக்குவது குறித்த வங்கதேச அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, ​​‘இடைக்கால அரசு இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை’ என்று தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் செய்தியாளர் செயலாளர் ஷபிகுல் ஆலம் தெரிவித்தார். மாணவர்கள் போராட்டத்தை தடுக்க அதிபர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் கலைந்து செல்லும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

* கலிதா ஜியா கட்சியினர் இடைக்கால அரசுடன் சந்திப்பு
முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் மூன்று பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்து, புதிதாக எந்தவொரு அரசியலமைப்பு நெருக்கடியையும் உருவாக்காமல் கவனமாக இருக்குமாறு நேற்று கேட்டுக்கொண்டனர். முகமது யூனுஸ் உடனான 30 நிமிட சந்திப்பைத் தொடர்ந்து, கலிதா ஜியா கட்சி பிரதிநிதிகள் குழுத் தலைவர் நஸ்ருல் இஸ்லாம் கான் கூறுகையில்,’ அதிபர் ராஜினாமா அல்லது பதவி நீக்கம் குறித்து நாங்கள் குறிப்பாக விவாதிக்கவில்லை. ஆனால் அரசியல் நெருக்கடிகள் புதிதாக உருவாக்கப்படாமல் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டோம்’ என்றார்.

The post ஷேக் ஹசீனா ராஜினாமா குறித்து கருத்து வங்கதேச அதிபர் பதவி நீக்கமா? இடைக்கால அரசு பதில் appeared first on Dinakaran.

Related Stories: