முதலீடு பணத்தை 2 மாதத்தில் 500% பெற்று தருவதாக கூறி சென்னை தொழிலதிபரிடம் ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கும்பல் கைது: மாநில சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: முதலீடு செய்யும் பணத்தை 2 மாதத்தில் 500 சதவீதம் லாபம் பெற்று தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.14 கோடி பெற்று மோசடி செய்த 6 பேர் கும்பலை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த வாரம் தேசிய சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். புகாரின்படி மாநில சைபர் க்ரைம் போலீசார் பாதிக்கப்பட்ட தொழிலதிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தொழிலதிபரை வாட்ஸ் அப் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் தொடர்பு கொண்டு, தான் தனியாக நிறுவனம் நடத்தி வருவதாகவும், தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 2 மாதத்தில் 500 சதவீதம் லாபம் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் தனது நிறுவனம் செபியின் அங்கீகாரம் பெற்றது என்று தெரிவித்துள்ளார்.

இதை நம்பி தொழிலதிபர் மோசடி நபர் கூறிய ஆப்பை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் தனது பல்வேறு வங்கி கணக்கில் இருந்து ரூ.14 கோடி பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் சொன்னபடி அந்த நபர் 2 மாதத்தில் 500 சதவீதம் லாபம் தரவில்லை. பிறகு தொடர்பு கொண்ட நபர் குரூப்பை கலைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து மாநில சைபர் க்ரைம் போலீசில் தொழிலதிபர் புகார் செய்தார். போலீசார் தொழிலதிபரிடம் ரூ.14 கோடி பணத்தை ஏமாற்றிய மர்ம நபர்களின் வங்கி கணக்கு விவரங்களை வைத்து செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.21.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பிறகு சுப்பிரமணியன் அளித்த தகவலின் படி, இந்த மோசடியில் ஈடுபட்ட நீலாங்கரையை சேர்ந்த மதன் (43), திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சரவணபிரியன் (34), ஆவடியை சேர்ந்த சதீஷ் சிங் (46), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஷாபகத் (38), மதுரை மாவட்டம் பொன்மேனியை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், தொழிலதிபரிடம் இருந்து ரூ.14 கோடி பணம் மோசடிக்கு பயன்படுத்திய 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. மணிகண்டன் என்பவர் தனது மோசடி பணத்தை ஷபாகத் என்பவர் மூலம் அமெரிக்க டாலராக மாற்ற முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடிக்கு மூளையாக செல்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை மாநில சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். அவரிடம் இருந்து மீதமுள்ள பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post முதலீடு பணத்தை 2 மாதத்தில் 500% பெற்று தருவதாக கூறி சென்னை தொழிலதிபரிடம் ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கும்பல் கைது: மாநில சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: