கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு ரயில் இயக்கம்: 24 மணி நேரம் கண்காணிப்பு

 

கும்மிடிப்பூண்டி, அக். 16: கவரப்பேட்டை ரயில் நிலையத்தை ஒட்டி 500 மீட்டர் தொலைவிலுள்ள லூப்லைன் வழியாக கடந்த 11ம் தேதி இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை வழியாக தர்பங்கா எக்ஸ்பிரஸ் சென்றது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் காயம் அடைந்த நிலையில் படுகாயம் அடைந்த நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் சேவை முற்றிலுமாக முடங்கியது. தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் 500 ஊழியர்கள் ஒத்துழைப்போடு அதிரடியாக ரயில் தண்டவாளங்கள் ராட்சத கிரேன் மூலம் சீரமைக்கப்பட்டது. பின்பு தொடர்ந்து மின்சார ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் விபத்து நடந்த இடத்தில் வரும்பொழுது குறைந்த வேகத்தில் இயக்க வேண்டுமென தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.

அதன்படி, ரயில் ஓட்டுநர்கள் விபத்து நடந்த பகுதியில் வரும்பொழுது மிகக் குறைவான வேகத்தில் கடந்து செல்கின்றனர். பருவமழை காரணமாக தண்டவாளம் தற்காலிகமாக மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சீரமைக்கப்பட்ட தண்டவாளங்களில் வெல்டிங் அடிக்கும் பணி மழை நின்றவுடன் நடைபெறும் எனவும் இதனை கண்காணிக்க இன்ஜினியர்கள், கேங் மேன்கள் பல்வேறு துறை ரயில்வே அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ஆனால் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைகள் சுத்தம் செய்யாமல் திறக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

The post கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு ரயில் இயக்கம்: 24 மணி நேரம் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: