அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு, மூன்றாவது தள படிக்கட்டுகளுக்கு பூட்டு: நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் அவதி

திருவள்ளூர், டிச. 21: அரசு மருத்துவமனையில் 2, 3வது தளங்களில் பூட்டுபோடுவதால் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் அவதியடைகின்றனர். எனவே, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முறையாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள் நோயாளிகள் அனைவரும் 3வது, 4வது தளத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள் லிஃப்டில் வர நினைத்தாலும் அதில் ஏறுவதற்கு நிறைய பேர் காத்து கிடப்பதால் படிக்கட்டுகளில் ஏறி செல்கின்றனர். ஆனால் அவ்வாறு ஏறி செல்லும்போது 2 வது மாடியில் இருந்து 3 வது மாடிக்கு படிக்கட்டுகளில் செல்ல முடியாதவாறு பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளனர். இந்நிலையில், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் அனைவருமே லிஃப்டில் தான் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது, நோயாளிகளை பார்ப்பதற்காக பார்வையாளர் அட்டை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே அந்த கேட் திறக்கப்படும். ஆனால் எந்த இடத்தில் நோயாளிகளை பார்ப்பதற்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது என்ற விவரமும் யாருக்கும் தெரியவில்லை. அதே நேரத்தில் நோயாளிகளை பார்க்க வருபவர்களை யாரும் ஆய்வு செய்து எங்கே செல்கிறீர்கள்? யாரை பார்க்க வந்துள்ளீர்கள் என எதுவும் கேட்ட மாதிரியும் இல்லை.

இதனால் நோயாளிகளை பார்த்து விட்டு வரும் உறவினர்கள் படிக்கட்டுகளில் இறங்கி வரும் போது கேட் பூட்டப்பட்டிருப்பதால் மீண்டும் திரும்பி சென்று லிஃப்டில் மட்டுமே கீழே இறங்கி வரவேண்டிய நிலை உள்ளது என கூறினார். மேலும், முறையான அறிவிப்பு, முறையான பராமரிப்பு ஏதுமின்றி மருத்துவமனையில் படிக்கட்டுகளில் பூட்டு போடப்பட்டு இருப்பதால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முறையாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் எனவும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் எளிதில் சென்று பார்த்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு, மூன்றாவது தள படிக்கட்டுகளுக்கு பூட்டு: நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: