பாடாய் படுத்தும் பருவநிலை மாற்றம் மதுரையில் வைரஸ் காய்ச்சலால் 73 பேர் பாதிப்பு: காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல்

மதுரை, செப். 25: மதுரை அரசு மருத்துவமனையில் 29 குழந்தைகள் உள்ளிட்ட 73 பேர் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஏற்கனவே டெங்கு பாதித்து சிகிச்சையில் இருந்து வரும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, 3 பேருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் கொளுத்தி வரும் தொடர் வெயில் காரணமாக சிறுவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகளவில் வெயில் மதுரை மாவட்டத்தில் கொளுத்தி எடுத்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக மதுரையில் வெயிலின் தீவிரம் உச்சம் தொட்டு, சதம் கடந்து 106 டிகிரி வரையிலும் வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த தீவிர வெப்பம் குறிப்பாக சிறுவர்களிடம் காய்ச்சல் பாதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே டெங்கு பாதித்த நிலையில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதில் 31 வயதுடைய ஆண் குணமடைந்து வீடு திரும்பினார். மீதி மூவருக்கு மட்டுமே மதுரை அரசு மருத்துவமனையின் டெங்கு சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு பாதித்தவ இவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் இவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவர் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலில் பாதித்து சிகிச்சைக்கு வருவோருக்கு என சிகிச்சை வழங்கிட வசதியாக 20 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு தயார்நிலையில் இருக்கிறது. இங்கு 24 மணிநேர மருத்துவர்கள் கண்காணிப்பு வழங்கப்படுகிறது. இதற்கிடையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 29 குழந்தைகள் உள்ளிட்ட 73 பேரிடம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர, வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 48க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக கண்டறியப்பட்டு, வீடுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவில் பருவ மழை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் கொளுத்தி வரும் வெயிலால் ஏற்பட்டுள்ள பருவ மாற்றம் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது: பருவ மழைக்காலங்களில் நோய்த்தொற்று ஏற்படுவது வழக்கம். இதனால் காய்ச்சல், தொண்டை வலி, வரட்டு இருமல், உடல் வலி, உடற்சோர்வு போன்ற அறிகுறிகளுடன் மக்கள் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருகின்றனர். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மழை துவங்கும் காலங்களில் டெங்கு, சிக்கன்குனியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சலுடன், இருமல், தும்மல் போன்ற தொற்றுகளும் பொதுமக்களிடையே வேகமாக பரவுகிறது. குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகளிடம் பரவும் காய்ச்சல், பின்னர் முதியவர்களுக்கு பரவுகிறது. நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க கவனமுடன் இருக்க வேண்டும்.

ஏனென்றால் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருப்பது பன்றிக்காய்ச்சலோ, டெங்குவாகவோ இருக்கலாம். எனவே அவற்றை உதாசீனப்படுத்தி சுயமாக மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்களிடம் அழைத்து சென்று சிகிச்சையளிக்க வேண்டும். ஏனென்றால் பன்றி காய்ச்சல் மூலம் நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எக்ஸ்இசி கொரோனா வைரஸால் பெரியவர்களுக்கும் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் சென்று முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமருத்துவம் பார்க்க கூடாது. காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்களை தனிமைப்படுத்தி வைப்பதன் மூலம் பிறருக்கு பரவாமல் தடுக்கலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

உணவில் கவனம் வேண்டும்
வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் உருவாகும். மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி. இக்காய்ச்சல் தொடர்ந்து 37 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும். நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.பருவ நிலை மாற்றம் காரணமாக, காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்கள் வருமென்பதால் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி, மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள்,

பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது. இனி வரும் மழைக்காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக்கொள்ளாது. நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழைக்காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பொரியல் செய்யும்போது அவற்றில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப்பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்கக்கூடாது. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.

The post பாடாய் படுத்தும் பருவநிலை மாற்றம் மதுரையில் வைரஸ் காய்ச்சலால் 73 பேர் பாதிப்பு: காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: