சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு

திருச்சி: ஐடி அதிகாரிகள் போல நடித்து சென்னை, கோவை, உள்பட பல இடங்களில் பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பொய்கைப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர்(44). இவர் வீரப்பூரில் மருந்துகடை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 1ம் தேதி காரில் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத 5 பேர் தாங்கள் வருமானவரித்துறை அதிகாரி என கூறி மெடிக்கலில் சோதனை நடத்தினர். பின்னர் சுதாகரை தங்கள் காரில் ஏற்றிக்கொண்டு திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றனர். அங்கிருந்தபடி சுதாகர் குடும்பத்தாரிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டுள்ளனர். சந்தேகமடைந்த சுதாகரின் குடும்பத்தினர் திருச்சி எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மோசடி கும்பலை தேடும் பணி முடுக்கப்பட்டது. போலீசாரின் தேடுதல் வேட்டையில் மஞ்சம்பட்டி அருகே பதுங்கியிருந்த மோசடி கும்பலை தனிப்படை சுற்றி வளைத்தனர். இதில் கேரளாவை சேர்ந்த நவுஷாத் (45), திருச்சி யை சேர்ந்த சேகர்(42), உப்பிலியபுரம் சுதாகர் (44), மதுரை மாரிமுத்து(53), சென்னை ஆவடியை சேர்ந்த வினோத் கங்காதரன்(37) மற்றும் சுதாகரை கடத்த உடந்தையாக இருந்த மணப்பாறை கார்த்திகேயன்(37) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

மேலும் இந்த கும்பல், துறையூரிலுள்ள சவுடாம்பிகை அம்மன் தெருவை சேர்ந்த ஒருவரிடம் வருமான வரித்துறையில் இருந்து வந்திருப்பதாக கூறி, ரூ.5.18 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் துறையூர் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மணப்பாறை சக்திவேல்(32), தஞ்சை மணிகண்டன்(29) ஆகியோரையும் தனிப்படை போலீஸ் கைது செய்தது. கைதான 8 பேர் கும்பலிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரண்டு டூவீலர்கள் மற்றும் 8 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். கைதானவர்கள் மீது சென்னை, கோவை, கடலூர், சேலம், திருப்பூர், வேலூர், திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களிலும் திருட்டு, வழிப்பறி, ஆட்கடத்தல் மற்றும் அரசு துறை அதிகாரிகள் என கூறி பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து மணப்பாறை மற்றும் துறையூர் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மோசடி கும்பலை திருச்சி ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

The post சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: